Sunday, September 02, 2018

தாயும் மகளும் பின்னே ஓர் மிதிவண்டியும்

பட உதவி: கூகுல் 


சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்தபோது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எங்கள் சாலைக்குள் திரும்பியபோது எதிரில் ஒரு தாயும் மகளும் வந்துகொண்டிருந்தனர். மகள் பதின்ம வயதுகளின் இறுதியில் இருப்பதாக தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பாள் போலும். மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வந்தாள். 


நான் அவர்களை கடக்கும்போதுதான் அந்த தாய் ஏதோ ஒரு வாக்கியத்தை பேசி முடித்தார். அநேகமாக ஏதோ குடும்பப் பிரச்சினை பற்றியோ அல்லது தனது தனிப்பட்ட கஷ்டத்தையோ மகளிடம் பகிர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு அந்த மகள் “just go with the flow ma” என்று ஆறுதலும் தைரியமும் தந்துகொண்டிருந்தாள். 


இந்த காட்சியும் உரையாடலும் நான் அவர்களை கடக்க எடுத்துக்கொண்ட ஓரு சில நொடிகளில் கவனித்ததுதான் என்றாலும், தாய் தன் பதின்ம வயது மகளிடம் வெளிப்படையாக ஒரு பிரச்சனையை விவாதிப்பதும் அதை அந்த இளம்பெண் புரிந்துகொண்டு முதிர்ச்சியுடன் ஆறுதலான பதில் தந்ததை கேட்டதும் எனக்கு ஏதோ ஒரு வித மன நிறைவை தந்தது.


எல்லா குடும்பங்களிலும் இப்படிப்பட்ட விஷயம் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நடக்கவேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன். இன்றைய பெற்றோர் குடும்ப கஷ்டங்களையோ, குடும்பத்திற்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் படும் அவஸ்தைகளையோ அல்லது தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளையோ குழந்தைகளிடம் சொல்லவதில்லை.


இன்றைய கீழ்தட்டு நடுதட்டு பெற்றோர்கள் பிள்ளைகள் கஷ்டப்படாமல் வளரவேண்டும் என்று நினைக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ள ஒரு புது மனோபாவம் இது. இன்றைய தாத்தா பாட்டிகளோ அல்லது அவர்களுக்கு முந்தைய தலைமுரையினரோ யாரும் அப்படி யோசித்ததாக தெரியவில்லை. கஷ்டப்பட்டால்தான் வாழ்க்கை என்னவென்று புரியும் என்ற தத்துவத்தை அவர்கள் பின்பற்றினர்.


பிள்ளைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் இந்த புது சித்தாந்தத்தால், அவர்களுக்கு கஷ்டங்கள் என்றால் என்னவென்றே தெறியாமல் ஒரு மாய உலகில் வளர்கிறார்கள். அதனாலேயே அவர்கள் பிரச்சனைகளை சந்திப்பதற்கும் அவற்றை தீர்ப்பதற்கும் மிகவும் பயப்படுகிறார்கள். அதனால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து போக முனைகிறார்கள் அல்லது அவற்றை சமாளிக்க எப்போதும் யாரவது ஒருவர் துணையை அல்லது தயவை எதிர்பார்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.


சிறு வயதிலிருந்தே குடும்ப கஷ்டங்களை புரிந்துகொண்டும் அவற்றை பெற்றோர் சமாளிப்பதையும் பார்த்தும் வளரும் பிள்ளைகள் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் யதார்த்தத்தோடு இயைந்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அத்தகைய சூழ்நிலையை குழந்தைகளுக்கு உருவாக்குவது பெற்றோரின் கை(வாய்)களில்தான் இருக்கிறது. ஏனென்றால் அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை.


6 comments:

 1. முன்னாட்களில் சொல்ல வேண்டிய தேவையே இல்லாமல் கூட்டுக்குடும்பமாக இருந்த காலங்களில் இந்த அனுபவங்களை கண்ணெதிரே பார்த்தே சிறியவர்கள் வளர்வார்கள். இனி கூட்டுக்குடும்பமுறை சாத்தியமில்லை என்பதால் மனம் விட்டுப் பேசுவதே தீர்வு. தொலைக்காட்சியையும், மொபைலையும் விட்டு வெளியே வரவேண்டும். அவ்வளவுதான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். கூட்டுக் குடும்ப முறை மக்களுக்கு பல வகையிலும் பயனுள்ளதாக இருந்தது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நல்லதொரு அலசல். கஷ்டம் தெரிந்து வளர்வதில் நல்ல அனுபவம் கிடைக்கிறது.

  மனம் விட்டு பேசுவதே இல்லையே இப்போது எந்தக் குடும்பத்திலும். பேசினால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கட்.

   Delete
 3. Replies
  1. தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete