Friday, February 16, 2018

பல்பு வாங்கிய தருணங்கள்


கிரிக்கெட்டில், வீசப்பட்ட பந்து, பேட்ஸ்மேனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, வேறு திசையில் திரும்பி எகிறுவதை கூக்லி என்பர்.

இதுபோன்ற அனுபவம் நமக்கும் சில சமயங்களில் ஏற்பட்டிருக்கும். நம் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஒரு விஷயத்தின் முடிவு இருக்கும். அதுபோல் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் இவை.

அந்நாட்களில் தூர்தர்ஷனில் உலா வரும் ஒளிக்கதிர் என்ற ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. அதில் தமிழகத்தில் நடந்த சில நிகழ்சிகளின் முக்கியமான பகுதிகளை தொகுத்து ஒளிபரப்புவார்கள். அப்படி ஒருநாள், தொழு நோய் பற்றி நடந்த ஒரு மருத்துவ மாநாட்டில் மருத்துவர் ஒருவர் பேசுவதை காட்டினார்கள். அதில் அவர் தொழு நோய் பற்றி ஆராய்ச்சி செய்ய வெளிநாட்டு மருத்துவர்களும் ஆராய்சியாளர்களும் இந்தியாவிற்கு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். அதை கேட்டதும், ஆஹா! வெளிநாட்டினரெல்லம் இங்கு வரும் அளவுக்கு தொழு நோய் ஆராய்ச்சியில் நம் நாடு அவ்வளவு முன்னேறிவிட்டதா என்று நினைத்து பெருமிதம் கொண்டேன். ஆனால், அந்த பெருமை ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அடுத்த வரியில் அவர் சொன்னது, ஏனென்றால் அந்த நாட்டிலெல்லாம் தொழு நோயே கிடையாது. அதை கேட்டதும் நொந்து போய்விட்டேன். செம கூக்லி இல்ல.

அடுத்ததை கேளுங்கள். சென்னை வானொலியில் உங்கள் விருப்பம் என்று ஒரு நிகழ்ச்சி வரும். இப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதில் நேயர்கள் விரும்பிக் கேட்ட பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதில் நேயர்களின் பெயர் மற்றும் அவர்களின் ஊர் பெயர்களை சொல்லி, இவர்கள் விரும்பி கேட்ட பாடல் என்று அறிவித்து பாட்டு போடுவார்கள்.

இதை பார்த்து ஒரு அற்புதமான சாக்லேட் விளம்பரம் உருவாக்கினார்கள் இருபது வருடங்களுக்கு முன். முதல் முறையாக அந்த விளம்பரத்தை கேட்பவர்கள் யாருமே எமாந்து போவர்கள். அந்த விளம்பரத்தில் உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் வருவது போலவே பெயர்களும் ஊர் பெர்யர்களும் வாசித்த பின் இவர்களெல்லாம் தயவுசெய்து என் பெண்ணை follow செய்யாதீங்க என்று ஒரு அப்பா சொல்வது போல் முடியும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்களும் அந்த விளம்பரத்தை உருவாக்கியவரின் ஆக்கத் திறமையை பாராட்டுவீர்கள். சரி, அந்த சாக்லேட்டின் பெயர் என்ன தெரியுமா? கூக்லி.


இவை தான் அந்த கூக்லி சாக்லேட் என்று நினைக்கிறேன். இதுவரை அந்த சாக்லேட்டை நான் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?


Tuesday, February 13, 2018

ஜீ... பூம்... பா...


சில நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு வித்தியாசமான சிலிர்ப்பான அனுபவம் இது. அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தன் நண்பர் ஒருவர் அவரை சந்திக்க வரப்போவதாகவும் அவரை எனக்கும் என் சக அதிகாரி ஒருவருக்கும் அறிமுகம் செய்துவைப்பதாகவும் சொன்னார். அப்படியானால் வரப்போகும் நபர் ஏதோவொரு வகையில் சிறப்பானவர் என்பது புரிந்தது. அவரே தொடர்ந்து சொன்னார் வரப்போகும் நபர் ஒரு மாயாஜாலக்காரர் என்று.

நண்பரும் அலுவலக நேரம் முடிந்து ஒரு சில நிமிடங்களில் வந்தார். அவருடன் அவர் உதவியாளரும் வந்திருந்தார். வந்த அந்த நண்பரின் பெயர் ஷங்கர். அவர் வயது எப்படியும் 70க்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பரஸ்பர அறிமுகம் செய்துவைத்த சக அதிகாரி, எங்களுக்காக சில மாயாஜாலங்கள் செய்து காட்டுமாறு வேண்ட, அவர் ஒரு காகிதத் துண்டு தருமாறு கேட்டார்.

அவர் செய்த முதல் தந்திரம் அந்த சிறு துண்டு காகிதத்தை நன்றாக கசக்கி மீண்டும் அதை பிரித்தார். எங்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. பிரித்ததும் அது ஒரு இரனடாயிரம் ருபாய் தாளாக அவர் கைகளில் விரிந்தது. இது மீண்டும் அந்த காகித துண்டாக மாறிவிடும் என்று சொல்லி அதை மடித்து கோட் ஜோபியில் போட்டுக் கொண்டார்.


அடுத்ததாக இரண்டு நாணயங்களை கையில் எடுத்துக்கொண்டு அவற்றை சட்டை ஜோபியில் போட்டு கையிலிருந்து எடுத்தல், வேறு கைக்கு மாற்றி ஜோபியிலிருந்து எடுத்தல் என்று வேறு வேறு விதமாய் மாற்றி மாற்றி மறைத்து எடுத்து காட்டினார்.

அடுத்ததாக என் கையை நீட்டச்சொல்லி என் கையை அவர் கையால் தடவினார். உடனே என் கையில் ஒரு பாதாம் பருப்பு இருந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட அந்த ஆச்சர்ய உணர்வை வார்த்தைகளால் சொல்வது கடினம்.

கடைசியாக அவர் முன்பு ஜோபியில் போட்ட அந்த இரண்டாயிரம் ருபாய் தாள் காகித துண்டாக மாறிவிட்டதா பார்க்கலாம் என்று சொல்லி அதை வெளியே எடுத்தார். பார்த்தல் அது அப்படியே மடித்த நிலையிலேயே இருந்தது. அதை அவர் பிரிக்க அது அப்படியே பல நூறு ருபாய் தாள்களாக மாறியது. கண் முன் நடந்த அந்த அதிசயத்தை கண்டு ஸ்தம்பித்துப் போனோம்.

அவர் வேறோர் இடம் செல்லவேண்டி இருந்ததால், அத்துடன் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே அவருக்கு மாயாஜாலத்தில் விருப்பம் அதிகமாம். பின்னர் அவர் பி.சி.சர்க்கார் சீனியர் உடன் 5 ஆண்டுகள் பணிபுரிந்து மாயாஜாலம் கற்றாராம். உலகில் பல நாடுகளில் அவர் மாயஜால நிகழ்சிகள் நடத்தியுள்ளாராம். அவருடைய நிகழ்சிகளின் வீடியோக்களை யூ-ட்யூபில் காண Jadugar Samrat Shankar என்று தேடவும்.

அது எல்லாமே கண் கட்டு வித்தை என்று தெரிந்தாலும் அதை ஆகில் இருந்து பார்க்கும்போது ஏற்படும் ஆச்சரிய உணர்வை தவிர்க்க முடியவில்லை. மேலும் அருகில் இருந்து பார்த்தாலும் அந்த தந்திரங்களின் இரகசியத்தை கவனிக்க முடியாதபடி அவர் செய்தார்.

இதுவரை பார்த்த மாயாஜால காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது மேடை மீது நடப்பதை தூரத்தில் கீழே உட்கார்ந்து பார்த்ததோதான். அவர் பக்கத்தில் அமர்ந்து கண்ணுக்கு அருகில் 2 அடி தூரத்தில் நடந்த அந்த மாயாஜாலங்களை பார்த்தது ஒரு சிலிர்ப்பான மறக்கமுடியாத அனுபவம்தான். இன்னொரு கூடுதல் சந்தோஷம் அவர் எங்கள் இருவருக்காக மட்டும் பிரத்யேகமாக அவற்றை செய்தது காண்பித்ததுதான்.

Saturday, February 10, 2018

சிரிக்கலாம் வாங்க - 1

திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே எத்தனை சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், மனக்குமுரல்கள் வந்தாலும் மற்றவர்கள் முன்பு  ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால், பலசமயம் அவர்களின் பேச்சும், எண்ணங்களும், செய்கைகளும் அவர்களையே மனம் விட்டு சிரிக்கவைக்கவும் செய்துவிடும். அப்படிப்பட்ட சில நகைச்சுவை உங்களுக்காக. 

இவை எல்லாம் எனக்கு வாட்ஸப்பில் வந்தவை. உங்களில் சிலர் இவற்றை முன்பே பார்த்திருக்கலாம். இருந்தாலும் இன்னொரு முறை சிரித்ததால் உடல் நலத்திற்கு நல்லதுதானே. 

தமிழாக்கம்: கோவில் சுவற்றில் எழுதப்பட்ட ஒரு அறிவிப்பு - உங்கள் மனைவியை கூட்டமான இடங்களில் தனியாக விடாதீர்கள். அவள் தொலைந்துபோனால், கடவுள் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டார் என்று நீங்கள் தவறாக நினைதுக்க் கொள்ளலாம்.

இந்த படத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை தானே.

இந்த சிரிப்பை கருத்தாக்கம் செய்தவருக்கு கண்டிப்பாக ஒரு 'ஓ' போடலாம். 

தமிழாக்கம்: ஒரு பெண் சொல்வது எப்போதும் சரி, ஒரு ஆண் சொல்வது எப்போதும் தவறு என்று ஏற்றுக்கொண்டால், பிறகு ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அவள் சொல்வது சரி என்று சொன்னால், அந்த ஆண் சொல்வது சரியா? தவறா?
அட! இது குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசு சொல்ற "பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ......." வசனம் போலவே இருக்கே. 

தமிழாக்கம்
மனைவி - இன்றைக்கு எனக்கு ஓய்வு வேண்டும். அதனால் சினிமாவிற்கு 3 டிக்கெட் வாங்கியிருக்கிறேன்.
கணவன் - 3 டிக்கெட் என்? (நாம ரெண்டு பேர் தானே போகப்போறோம் என்று நினைத்துக்கொண்டு)
மனைவி - உங்களுக்கும் உங்க அம்மா அப்பாவிற்கும்.

தமிழாக்கம்: கணவனும் மனைவியும் விவாகரத்து பெற நீதிமன்றம் சென்றனர். நீதிபதி, "உங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி பிரித்துக்கொள்வீர்கள்?" என்று கேட்கிறார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் கலந்தாலோசித்த பிறகு மனைவி சொல்கிறாள், "சரி ஐயா, நாங்கள் அடுத்த வருடம் இன்னுமொரு குழந்தையோடு வருகிறோம்" என்று. 9 மாதங்கள் கழித்து அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. விதி யாரை விட்டது?!

Saturday, February 03, 2018

உஷாரய்யா உஷாரு



உங்களுக்கு தெரிஞ்சே உங்களுக்கு தெரியாம உங்ககிட்ட பணம் பறிக்க முடியுமா?

என்னடா ஆச்சு இவனுக்கு? தூக்க கலக்கத்துல எதையோ தட்டி விட்டிருக்கானான்னு நெனைக்காதீங்க. பதிவ முழசா படிச்சா உங்களுக்கு நான் சொல்ல வர விஷயம் புரியும்.


சூப்பர் மார்க்கெட்ல அடிக்கடி பொருட்கள் வாங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? அப்படின்னா கொஞ்சம் உஷாரா இருங்க. என்னடா குண்ட தூக்கி போடறானேன்னு பயப்படாதீங்க. கொஞ்சம் கவனமா இருந்தீங்கன்னா உங்களுக்கு நஷ்டம் வராம பாத்துக்கலாம்.

super market, shopping, சூப்பர் மார்கெட்
இந்த பொண்ணுங்க மாதிரி பொருளோட வெலய பாத்து வெச்சிக்கோங்க 
சூப்பர் மார்க்கெட்ல எந்த பொருள் எடுத்தாலும் கூடைலியோ தள்ளு-வண்டியிலோ போடறதுக்கு முன்னாடி அதோட விலையை மனசுல குறிச்சி வெச்சிப்பேன். அது என்னோட பழக்கம்.

அதே மாதிரி, பில் போடற கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் நம்மள பார்த்து இருந்தா, அவங்க ஒவ்வொரு பொருள பில்லுல எத்தும்போதும் அதோட விலைய செக் பண்ணிப்பேன். எதாவது தப்பு இருந்தா, உடனே அவங்கள கேப்பேன். ஸ்கரீன பாக்கமுடியலன்னா பில்ல கைல வாங்கினதும் மொத வேலையா பொருட்களோட விலைய சரி பாப்பேன்.


ஒருவாட்டி ஒரு சூப்பர் மார்க்கெட்ல பொருட்களோடு பழங்களும் வாங்கினேன். பல வகை அப்பிள்கள் அங்க இருந்தது. நான் அதுலேர்ந்து எனக்கு வேண்டிய வகை அப்பிளை எடுத்துகிட்டு மறக்காம அதோட விலையை பார்த்து வெச்சிகிட்டேன்.


கவுன்ட்டர்ல பில்ல போட்டு பணத்த கட்டினேன். பில்ல வாங்கி பார்த்தப்பதான் தெரிஞ்சுது நான் வாங்கின அப்பிளோட விலைய போடாம விலை ஜாஸ்தியான வெளிநாட்டு அப்பிளோட விலைய தட்டி பில் போட்டிருக்காங்கன்னு. உடனே அவங்க கிட்ட சொன்னதும் ஓடிப்போய் நான் வாங்கின அப்பிளோட விலைய சரி பார்த்துட்டு வந்து பில்ல மாத்தி போட்டு மீதி காச குடுத்தாங்க. 

இதுபோல ரெண்டு மூணு வாட்டி வேற வேற பொருள்ல நடந்திருக்கு. கேட்டதுக்கப்பறம்தான் தலைய சொறிஞ்சிகிட்டு பில்ல மாத்துவாங்க. சாரி கூட சொல்லமாட்டாங்க. (ஒருவேள பில் போடற பொண்ணுங்க சுரிதார் போட்டிருந்ததாலோ என்னவோ!)

இன்னொருவாட்டி வேற ஒரு சூப்பர் மார்க்கெட்ல ஷு பாலிஷ் வாங்கினேன். அதோட வெல 65 ரூபா. ஆனா பில்லுல பாத்தா 67-னு இருந்துச்சி. என்னடான்னு கேட்டா பதிலே சொல்லாம 2 ரூபாவ திருப்பி குடுத்தான். உன் கம்ப்யூட்டர்ல பொருளோட விலைய மாத்துப்பான்னு சொல்லிட்டு வந்தேன். மாத்தினானோ இல்லையோ தெரியாது.


வேற ஒரு வாட்டி, சூப்பர் மார்க்கெட் மாதிரி நாமளே உள்ள போய் பொருள எடுக்கற ஒரு மளிகை கடைல வாங்கினப்ப நடந்த சம்பவம் இது. அங்க ஒரு எடத்துல பில்ல போட்டு இன்னொரு இடத்துல காசு கொடுக்கணும். பில்ல வாங்கி செக் பண்ணினப்போ, பாதி பில்லா பாக்கறதுக்குள்ள ரெண்டு மூணு வாங்காத பொருள் பில்லுல இருந்தது. கட மொதலாளிய கூப்டு சொன்னேன். அவர் வந்து கூடைல இருந்த பொருள எல்லாம் எடுத்து ஒவ்வொன்னா பில்லோட செக் பண்ணாரு.

அந்தாளுக்கு அதிர்ச்சி. வாங்காத சில பொருளுக்கு பில் போட்டமாதிரி வாங்கின சில பொருளுங்க பில்லுல இல்ல. அதுவும் வெல அதிகமா இருக்கற துவரம் பருப்பு மாதிரியான பொருளுங்க. அப்ப துவரம் பருப்பு கிலோ 2௦௦ ரூபா கிட்ட இருந்தது. அப்பத்தான் தெரிஞ்சுது பில்லு போட்ட ஆளு வேலைக்கு புதுசுன்னு. பொருளோட கோட (code) தப்பு தப்பா தட்டி பில் போட்டிருக்காரு. நான் செக் பண்ணாம விட்டிருந்தா எனக்கு லாபம். ஏன்னா பில்லுல விடுபட்ட பொருளெல்லாம் வெல ஜாஸ்தி. தப்பா பில்லுல சேத்த பொருளெல்லாம் வெல கம்மி. இருந்தாலும் நமக்கு நீதி, நேர்மை, நியாயம் தானே முக்கியம். என்ன நான் சொல்றது சரிதானே?


அதேபோல இன்னொரு விஷயம். சில பொருட்களுக்கு ஏதாவது இலவச இணைப்பு இருக்கும். வாங்கற பொருளுக்கு அப்படி ஏதாவது இருந்தா அதையும் ஞாபகம் வெச்சுப்பேன். பில் போடும்போதே அவங்களுக்கு நியாபகப்படுத்துவேன். இல்லன்ன பல சமயம் அவங்க சைலெண்டா இலவசத்த குடுக்காம விட்டுடறாங்க.


அது கொழந்தைங்களுக்கான பொருளா இருந்து இலவசத்த மறந்துட்டு வீட்டுக்கு போயிட்டோம்னா செத்தோம். மறுபடியும் கடைக்கு ஓடிவந்து அந்த இலவசத்த கேட்டு வாங்கிட்டு போகணும். அந்த ட்ரிப்ல கொழந்தைங்க கண்டிப்பா நம்மகூட வருவாங்க. நேரம் சரியில்லன்னா அங்க அவங்க வேற எதாவது பொருள பாத்துட்டு அதுவும் வேணும்னு அடம் பிடிச்சி பர்சுல இருக்கற மிச்சம் மீதி காசுக்கும் வேட்டு வெச்சிடுவாங்க. .

என்னடா இப்பிடி அல்பதனமா 2 ரூபா 3 ரூபா விஷயத்த பெருசா சொல்றானேன்னு நெனைக்காதீங்க. ஒத்த ரூபாவா இருந்தாலும் ஒழச்சி சம்பாதிச்ச காசாச்சே. எமாத்தரான்னு தெரிஞ்சப்பரம் விட மனசு வருமா? அந்நியன் படத்துல வருமே - 5 பைசா திருடினா தப்பா? 5 தடவ 5 பைசா திருடினா தப்பா? 5 கோடி பேர்கிட்ட 5 தடவ 5 பைசா திருடினா தப்பா?-னு. அந்த வசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன். கேக்கரவங்களுக்குத்தான் அந்த காசு திரும்ப கெடைக்குது. கேக்காதவங்க எத்தன பேரோ?

இதெல்லாம் அவங்க தெரிஞ்சி செய்யறாங்களோ தெரியாம செய்யறாங்களோ, பாதிப்பு என்னவோ நமக்குத்தான். அதனால நாமதான் மக்களே உஷாரா இருக்கணும். உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்கும்னு நெனைக்கிறேன். இருந்தாலும் என்னவோ உங்ககிட்ட சொல்லணும் தோணிச்சு. சொலிட்டேன். பாத்து சூதானமா இருந்துகோங்க.

Thursday, February 01, 2018

என்னப்பா, இப்பிடி பண்றீங்களேப்பா!

சில வாரங்களுக்கு முன் ஏதோ ஒரு தொலைக்கட்சியில் கும்பக்கரை தங்கையா படம் ஒளிபரப்பினார்கள். அதில் வரும் ஒரு காட்சியில் போலீஸ் எஸ்.எஸ்.சந்திரனிடம் நூறு ரூபாய்க்கு சில்லறை கேட்பார் செந்தில். இல்லை என்றதும், அருகில் இருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் இருக்கிறது, நீங்கள் சொன்னால் தருவார் என்று செந்தில் சொல்வார். எஸ்.எஸ்.சந்திரனும் அவருக்கு சிபாரிசு செய்ய, செந்தில் போய் சில்லறைக்கு பதிலாக போலீசின் உறவினர் என்று சொல்லி ஒரு புது சைக்கிளை எடுத்துச் சென்றுவிடுவார்.


அதை பார்த்ததும் உடனே மூளைக்குள் பல்பு எரிந்தது. அடடே! இதே போன்ற காட்சி இன்னொரு படத்திலும் வருமே என்று. யோசித்துப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அந்த படம் விஜய்  நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை.

காட்சி/வசனங்ககளில் ஒரு சில சிறிய மாற்றங்களே. அந்த படத்தில் போலீஸ் என்றால் இதில் டிராபிக் போலீஸ். இதில் பாண்டு டிராபிக் போலீசாக நடித்திருப்பார். அந்த படத்தில் காமெடியன் செந்தில் செய்வதை இந்த படத்தில் ஹீரோ விஜய் செய்வார்.


கும்பக்கரை தங்கையா வெளிவந்தது 1991-ல். கோயம்புத்தூர் மாப்பிள்ளை வெளிவந்தது 1996-ல்.

திருட்டு வீசீடீ மற்றும் இணையத்தில் படம் வெளிவந்தால் எங்கள் உழைப்பு திருடப்படுகிறது என்று கூப்பாடு போடும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இப்படி தங்கள் சகாக்களின் சிந்தனையை திருடி தங்கள் படத்தில் போடுவது சரியா?  காபி அடிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். படம் பார்க்க வரும் மக்களையும், அவர்கள் ஏற்கனவே வேறு படத்தில் பார்த்த காட்சிகளை காட்டி ஏமாற்றுவது ஞாயமா? 

நான் வெகு அரிதாகவே திரைப்படம் பார்ப்பவன் என்பதால் எனக்கு தெரிந்த  காபி அடிக்கப்பட்ட காட்சி  இது ஒன்றுதான்.  இன்னும் நிறையவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னப்பா, இப்பிடி  பண்றீங்களேப்பா!