Thursday, July 19, 2018

பார்த்தாலே பற்றிக்கொள்ளும் கிருமி

வாட்ஸாப்பில் வந்த இந்த பதிவு அற்புதமாக எழுதப்பட்டுள்ளதால் யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அதை இங்கே பதிவேற்றுகிறேன்.
====================================================================================================================

நம்மள போலவே கார்ப்பரேட் விளம்பரத்தால் கடுப்பான எவனோ எழுதியிருக்கான். ஆனா செம!

உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற விளம்பரங்கள் நிஜமா?????

காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு மணி நேரம் கிருமிகளிடமிருந்து உங்கள் பல்லுக்கும் வாய்க்கும் பாதுகாப்பு” என்று பாடம் நடத்துகிறார்.

விட்டால் வீடுவீடாக வந்து காலங்காத்தாலே பல் துலக்கி விட்டு ஹோம்டெலிவரி என்று செர்வீஸ் சார்ஜும் போட்டு பில்லை தலையில் கட்டுவார்கள் போல.

கக்கா போகலாம் என்று கக்கூசுக்கு போனால் உடகாராதீங்க உட்காராதீங்க என்று அங்கே ஒரு மாஜி நடிகர் வலக்கையில் துடைப்பமும் இடக்கையில் கிருமிநாசினியுமாக உள்ளே நுழைகிறார்.

“அட நிம்மதியா காலைகடன் கழிக்க கூட விடமாட்டீங்களா”என்றால் “உங்க டாய்லெட்டு 100 % சுத்தமா இருக்கா?” என்கிறார் “அட வாரத்துக்கு ஒருக்கா கழுவி வுடுறேன் நீங்க போங்க பாஸ்” என்றால் கையிலிருக்கும் பூதக்கண்ணாடியால் கக்கூசை ஆராய்ச்சி செய்கிறார். “சார் இது போதவே போதாது எங்க டாய்லட் கிளீனர யூஸ் பண்ணினீங்கன்னா கிருமிகள் எல்லாம் செத்துரும் நாள் முழுக்க கக்கூஸ் நல்லா இருக்கும்” என்கிறார்.

“யோவ் நான் என்னய்யா நாள்முழுக்க கக்கூசுலயா குடித்தனம் நடதுறேன் போய்யா” என்றால் “ சார் ஸ்மார்ட் கக்குஸ் ஸ்மாட்டஸ்ட் கக்கூசர்”என்கிற காண்டெஸ்ட்ல வின் பண்னினா நீங்க வெளிநாடு போகலாம்” என்ற படி பாட்டிலுடன் கூப்பனை நீட்டுகிறார்.

“யோவ் வெளிநாடு போகிறது இருக்கட்டும் நான் முதல்ல வெளிக்கி போகணும். நீ முதலில வெளியில போய்யா” என்று கதவை சாத்தவேண்டி இருந்திச்சு.

ஒரு வழியா வெளிய வந்தா ஒருத்தன் ஓடி வந்து கைய புடிச்சு ஒரு மைக்ரோஸ்கோப்புல வச்சிட்டு சொல்றான் “ சார் பாருங்க உங்க உள்ளங்கை முழுக்க ஆயிரக்கணக்கான கிருமிகள்” “யோவ் நீ யாருய்யா. நான் நல்லா கைய கழுவிட்டு தான்யா வந்திருக்கிறேன்”என்று நான் டென்ஷனாகலாம் என்று பார்த்தால் பதிலுக்கு அவர் டென்ஷன் ஆகிறார்.*

“சார் நீங்க வெறும் தண்னீல கைய கழுவினீங்க எங்க ஹேண்ட் வாஷ் எக்பெர்ட் போட்டு கழுவினீங்களா. இல்ல இல்ல அப்போ எப்படி சார் உங்க கையில கிருமிகள் எல்லாம் சாகும்” என்று பீதியூட்டும் புன்னகையுடன் பார்க்கிறார்.

வேண்டாம் விட்டுடங்க என்பதை கேக்காமல் உள்ளங்கையில் ரெண்டு சொட்டை வைத்து இப்போ நல்லா கழுவுங்க சார் என்க்றார். “யோவ் என்னமோ நான் பொறந்ததிலேருந்தே கையை கக்கூசுக்குள்ள விட்டுட்டு திரிஞ்ச மாதிரியில்ல இருக்கு உன் பேச்சு ஆளவிடுப்பா” என்று குளியலறைக்குள் நுழைந்தால்,

அங்கே ஒரு அம்மா கையில் சோப்புடன் உங்க ஸ்கின்னோட பத்து பிரச்சனைகளுக்கு இது தான் தீர்வு என்று சோப்பை மூக்குக்கு நீட்டுகிறார்.


“இந்தாம்மா இந்த பத்து படை இதெல்லாம் எனக்கு பிரச்சினையே இல்ல முதல்ல ஆம்பிள குளிக்கிற இடத்துல உனக்கென்னமா வேலை வெளிய போம்மா” என்கிறேன்.

“சார் அப்போ எங்க சோப்ப போடுங்க உங்க அக்குள்ல இருந்து தொப்புள் வரைக்கும் கிருமிகளை கழுவிக்களைய இது இருபத்தி நாலுமணி நேர கேரண்டி” என்று அண்டாவுக்குப்பின்னாலிருந்து எழுகிறாள் இன்னொரு பெண்.

“உட்டா உலகத்துல இருக்கிற கிருமியெல்லாம் என் உடம்ப குத்தகைக்கு எடுத்து குடித்தனம் பண்றதா சொல்வீங்க போல”ன்னு வெளிய தொரத்திட்டு குளிச்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்ணு ஆயிடிச்சு.

நிம்மதியா சப்பிடலாம்ணு ஒரு பிடி சோத்த வாய்க்கு கொண்டு போற நேரத்துல பொருத்தமே இல்லாம வேலைக்காரி வேஷம் போட்ட ஒரு விளம்பர மாடல் வந்து கைய பிடிச்சு சாப்பிடறத நிறுத்துறா.

பதட்டத்தோட பரபரக்கிற என் மனைவி கிட்ட கேக்குறா“பாத்திரம் கழுவும் போது பாத்து கழுவினீங்களா”. என் மனைவியோ செய்யக்கூடாத குற்றத்தை செய்து விட்டது போல திருதிருவென்று முழிக்கும் கணத்தில்,

“உங்க பாத்திரங்கள் எங்களோட நீமும் எலுமிச்சையுமுள்ள டிஷ் வாஷ் வச்சி கழுவினா தான் கிருமிகளெல்லாம் சாகும். பாத்திரமும் பளபளக்கும்” என்கிறாள்.*

“அட நிம்மதியா சப்பிடவும் விட மாட்டீங்களா” என்று எழுந்து தண்ணி குடிக்கப்போனால் அங்கேயும் விடுறதாயில்லை.

ஜன்னல் வழியாக எட்டி பார்த்து எகத்தாளமாய் சிரித்து விட்டு ஒருவன் சொல்கிறான் “உங்க தண்ணி சுத்தமானதா? எங்க தண்ணி 100% ஜெர்ம்ஸ் ஃப்ரீ அடிஷனலா இரும்பு சத்தும் சேர்த்திருக்கோம்”*

“யோவ் என்னைய்யா தண்ணியையே நீங்க தான் கண்டு பிடிச்ச மாதிரி பேசுறிங்க” என்றால் “ இரும்பு சத்து சார் இரும்பு சத்து” என்று பாட்டிலை வாய்க்கு நேராக நீட்டி ஆட்டுகிறான். “இரும்பு சத்து வேணும்னா நான் இந்த ஜன்னல் கம்பியையே கடிச்சு சாப்பிட்டுகிறேன் நீ கிளம்புப்பா” என்று துரத்தி விட்டு திரும்பி சட்டையை போட்டுட்டு கிளம்பலாம் என்றால்,

அங்கேயும் ஒரு எக்ஸ்பெர்ட் கையில் பாட்டிலுடன் நிக்கிறான்.

அவன் சொல்லும் முன்பே நான் முந்தி கொள்கிறேன்”யோவ் இது சத்தியமா சுத்தமா துவச்ச சட்டை தான்யா” என்கிறேன்.

அவனோ சிரித்தபடி “துவச்சீங்க ஆனா எங்களோட இந்த ப்ராடக்ட்ல ரெண்டு சொட்டு உட்டு துவச்சீங்கன்னா துணியில ஒரு கிருமி கூட ஒட்டிக்கிட்டு இருக்காது” எனக்கு சட்டையே வேண்டாம் என்று ஹேங்கரை தூக்கி எறிந்து விட்டு ஹாலிற்கு வந்தேன்.

”சார் காலை கொஞ்சம் தூக்குங்க” என்று தரையை தண்ணீர் விட்டு துடைக்கிறாள் இன்னொரு விளம்பர பெண் “என்னம்மா என்ன ஆச்சு” என்றால் “தரையெல்லாம் கிருமிகள் சார்.

எங்க ஃப்லோர் கிளீனர் கண்ணுக்கு தெரியாத கிருமியை எல்லாம் அழிச்சு உங்க தரையை சுத்தம் பண்னிடும். காலை தூக்குங்க சார்” என்ற படி தரையில் ஒரு தேய்ப்பு தேய்க்கிறாள்.

”கண்னுக்கு தெரியாத கிருமி எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது” என்றால் “டெக்னாலஜி சார் டெக்னாலஜி” என்கிறாள்.

காலையில எழுந்து, கக்கூஸ் போனா கிருமி, கைய கழுவினா கிருமி, பல்லை தேய்ச்சாலும் கிருமி, குளிச்சாலும் கிருமி, நடந்தா காலில கிருமி நடக்குற தரையிலும் கிருமி உட்காந்த கிருமி உட்காருற இடத்திலயும் கிருமி முகத்தை தொடச்சா கிருமி சாப்பிட்டா கிருமி சாப்பிடுற தட்டிலயும் கிருமி தண்ணி குடிச்சா கிருமி வெளியில போனா கிருமி உள்ள வந்தா கிருமி மண்டைல கிருமி தொண்டையில கிருமி வாயில கிருமி வாசலில கிருமி துணியில கிருமி தும்மினா கிருமி தூங்கினா கட்டில்ல கிருமி தூங்கி எழுந்தா மறுபடியும் பல்லில கிருமி என்று தெனாலி கமல் மாதிரி தினமும் பொலம்ப வச்சிடுறானுங்க.

“ஏண்டா இந்த பூமியில கிருமி நாசினிகள் வரும் முன்னாடியே மனுஷங்க வாழ்ந்திட்டு இருக்கானுங்க மனுஷங்க வரும் முன்னாடியே கிருமிகள் வாழ்ந்திட்டு இருக்கு.

அது பாட்டுக்கு இருந்திட்டு போகட்டும் இப்படி உலகததையே கழுவி தொடச்சி கிருமிகள அழிச்சி பளபளன்னு வச்சிட்டு பவுடர் போட்டு அழகு பாக்கவா போறீங்க.

ஓடிப்போயிடுங்க என்றபடி மனைவியைப்பார்த்தன் அவள் சொன்னாள் “

கடைசியா ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு இந்த டிவி பொட்டியிலிருந்து தான் எல்லா கிருமிகளும் இங்கே வீட்டுக்குள்ள வருது முதல்ல அத அணைச்சிடுங்க” என்கிறாள். நான் டிவியை அணைத்து விட்டேன். அதிலிருந்து எங்கள் வீட்டுக்குள் கிருமிகள் இருக்கலாம் ஆனால் வியாபாரக்கிருமிகள் இல்லை.

இப்போதான் நானும் என் மனைவியும் குழந்தைகளும் கிருமிகளும், கொஞ்சம் நிம்மதியா இருக்கிறோம் என்கிறார் ஒரு சாமானியன்.
====================================================================================================================

Wednesday, July 11, 2018

அப்பாவியின் அனுபவம் - 2

அரசுப்பணி கிடைத்தவுடன் நான் முதன்முதலாக பணியமர்த்தப்பட்ட இடமானது பத்து நிமிட நடையில் விமான நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம், பன்னாட்டு நிறுவனங்கள், உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள், மால்கள், 1000 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 50 மீட்டர் தூரம், சென்னைக்கு மிக மிக அருகில் மற்றும் இத்யாதிகள் என்று எந்த அடைமொழிகளும் இல்லாத, ரயில் மற்றும் பேருந்து நிலையம் மட்டுமே உள்ள சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊராகும்.


உலக வழக்கப்படி மற்ற எல்லோரையும் போல நானும் என் மூத்த சகாக்களின் அறிவுரைப்படி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சென்னைக்கு இடமாற்றம் கோரி விண்ணப்பம் எழுதிக் கொடுத்தேன். முதல் நாளே துண்டு போட்டு இடம் பிடிக்கக் காரணம் விண்ணப்பித்த தேதியின் அடிப்படையில்தான் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு பணியிட மாறுதல் கிடைக்கும்.


இடமாற்றம் கிடைக்க எப்படியும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த அப்பாவி, தினமும்  மாங்கு மாங்கென்று சென்னையிலிருந்து வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தேன்.



வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் கழித்து ஒருநாள் கண்காணிப்பாளர் எங்கள் அலுவலகத்திற்கு ஆய்வுக்காக வந்திருந்தார். அவர் தன் பணி முடிந்தவுடன் நாங்கள் பணி செய்துகொண்டிருந்த பகுதிக்கு வந்து இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அவர்களை பார்த்தபடி மெதுவாக நடக்கும் அந்நிய நாட்டு தலைவர் போல எங்களை எல்லாம் பார்த்தபடி நிதானமாக நடந்தார்.


என் அருகில் வந்ததும்,

"நீங்க சென்னைக்காரரா?" என்றார்.

"ஆமாம் சார்"

"நீங்க டிரான்ஸ்பர் ரிக்வெஸ்ட் தந்திருக்கீங்களா?"

"ஆமாம் சார்.  கொடுத்திருக்கேன்"

"சென்னையிலிருந்து தினமும் வந்துட்டு போரீங்களா?

"ஆமாம் சார்"

அவருக்கு அறிமுகம் இல்லாத என்னிடம் இவ்வாறு நேரடியாக மாறுதல் பற்றி பேசியதும் மிதமான வெயிலும் சில்லென்ற தூரலும் கலந்து பிரசவித்த வானவில்லை பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்தை உணர்ந்தேன். ஆஹா! மிக அக்கறையாக விசாரிக்கிறாரே. மற்றவர்கள் சொன்னதுபோல் ஆண்டுகள் கணக்கில் காத்திருக்கவேண்டியதில்லை போலும். ஏதாவது ஏற்பாடு செய்து நமக்கு உடனே மாற்றல் தருவார் போலிருக்கிறது என்று தோன்றியது.

காரணம், அந்த கால கட்டத்தில்தான் சென்னையில் இருந்த எங்கள் துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டரை பெரிய அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்கள். சீனியர்கள் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் நாட்டமும் அனுபவமும் இல்லாததால் என்னைப்போன்ற இளைஞர்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அதைப்போன்ற கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட எதாவது வேலைக்காக என்னை அழைப்பர்களோ என்ற எண்ணம் எழுந்தது.

தனி அறையில்  ஹீரோ ஹீரோயினை நெருங்கும்போது தடங்கலாக தட் தட் தட்னு யாராவது கதவு தட்டுவாங்களே, அதைப்போல என் எண்ணங்களுக்கு தடங்கலாக ஏதோ ஒரு கேள்வி  கேட்கப்பட்டது காதில் விழுந்தது. முதலில் அது சரியாக புரியவில்லை. பிறகுதான் ஊசியிலிருந்து மருந்து மெதுவாக உடம்புக்குள் இறங்குவதுபோல் என்ன கேட்கப்பட்டது என்பது மண்டைக்குள் இறங்கியது.

கேட்டது அந்த அதிகாரிதான். கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.

"நீங்க தினமும் சென்னையிலிருந்து வந்து போறீங்களே, அதுக்கு துறையிலிருந்து அனுமதி வாங்கியிருக்கீங்களா?"

கேட்கப்பட்டது முழுவதும் மண்டைக்குள் இறங்கியவுடன் நான் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றேன். காரணம் அப்படி எந்த அனுமதியும் நான் பெறாததுதான். அதனால் ஏதாவது வில்லங்கம் வந்துவிடுமோ என்று வேறு பயம் கவ்விக்கொண்டது.

கமரக்கட்டு கிடைக்கும் என்று ஆசையாய் காத்திருக்கும்போது கண்களை கட்டி கடத்திச்சசெல்லப்பட்ட குழந்தையின் நிலை போல இருந்தது அப்போதைய என் நிலை. என் இடத்தில் வடிவேலு இருந்திருந்தால், "ஆட்டோல ஏத்தி விட்டாங்க. வீட்டுக்குத்தான் அனுப்புராங்கானு நம்பி ஏறினா அது நேரா ஒரு மூத்தர சந்துக்குள்ள போய் விட்டுச்சி" என்று கிரி பட வசனத்தை பேசியிருப்பார்.

அரசு ஊழியர் அவர் பணியமர்த்தப்பட்ட ஊரில்தான் குடியிருக்க வேண்டும் என்பது அரசுப்பணி விதி. அப்படி ஒருவேளை அவர் வேறு ஊரில் வசிக்க நேர்ந்தால் அதற்கு துறையிடம் அனுமதி வாங்கவேண்டும். வேலைக்கு சேர்ந்த புதிது என்பதால் பச்சப்புள்ளயா இருந்த எனக்கு அது தெரியாமல் போனது  என் தலைவிதி.

திடீர் பயத்தில் வறண்டுபோன வாயால் "இல்ல சார்" என்று சொல்லும்போது வார்த்தைகளுக்கு பதிலாக வெறும் காற்றுதான் வந்தது என்று நினைக்கிறேன். நான் சொன்னது அவர் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது.

கூட்டமான பேருந்தில் காலியாகும் ஒரு இருக்கையை எங்கோ நிற்கும் ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு போய் பிடித்தவுடன் பெருமை பொங்கும் முகத்துடன் மற்றவர்களை ஒரு லுக்கு விடுவாரே அப்படிப்பட்ட ஒரு பெருமிதப் பார்வையை என் மீது வீசி மேலும் எதுவும் கேட்காமல் நடையை கட்டினார் கண்காணிப்பாளர்.

நல்லா கெளப்பராங்கைய்யா பீதிய!

Monday, July 02, 2018

மனமகிழ் பயணம் - 2

பகுதி 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்.


மதியம் சுமார் இரண்டு மணிக்கு விடுதியை சென்றடைந்தோம். அந்த விடுதி குவஹாடி ரயில் நிலைய சாலையில் அமைந்திருந்தது. எல்லாருக்கும் பசி. ஏற்கனவே ஒருமணி நேரம் வெயிலில் பயணித்து வந்திருந்ததால் மீண்டும் வெளியில் எங்கும் சென்று சாப்பிட யாரும் விரும்பவில்லை. விடுதியிலேயே உணவகம் உண்டென்றாலும் அங்கே அசைவமும் உண்டு என்பதால் கொண்டு வந்திருந்த நொறுக்கு தீனிகளில் சிலவற்றை உண்டு ஓய்வெடுத்தோம். 

அதற்குள் சுற்றிப்பார்க்க இடங்கள் ஏதாவது அருகில் இருக்கின்றனவா என்று நான் கூகுள் மேப்ஸ்-ல் தேடினேன். அரசு அருங்காட்சியகம் அருகில் இருப்பதாக அது காட்டியது. சுமார் நான்கு மணிக்கு புறப்பட்டோம். விடுதியின் வரவேற்பில் விசாரித்ததில் நடந்து செல்லும் தூரத்தில்தான் அருங்காட்சியகம் உள்ளது என்று சொன்னார்கள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கே இருந்தோம்.
 
அருங்காட்சியக கட்டடம்
அருங்காட்சியகம் அந்த கட்டடத்தின் 3 தளங்களில் அமைந்துள்ளது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.5/- சிறுவர்களுக்கு ரூ.2/-. உள்ளே சென்றதும் முதலில் அவர்கள் முதல் தளத்திற்கு செல்லுமாறு வழிகாட்டினார்கள். அங்கே ஒரு அறையில்  அஸ்ஸாமிய ஓவியர்கள் தீட்டிய ஓவியங்களும், மற்றொரு அறையில் அஸ்ஸாமிய தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பல அறிய புகைப்படங்கள் மற்றும் அவர்கள் எழுதிய கடிதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் ஒன்று, மகாத்மா காந்திஜி தமிழில் எழுதிய கடிததின் ஒரு பகுதி. அதில் அவர் “நீரில் எழுத்தொக்கும் யாக்கை” என்று எழுதி ம.க.காந்தி என்று கையொப்பமிட்டுள்ளார். அதை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தது அங்கிருந்து இரண்டாம் தளத்திற்கு சென்றோம். அங்கே அஸ்ஸாமிய கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை காட்சிப்படுத்தும் விதமாக உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கைவினைப்பொருட்கள், இசைக் கருவிகள், இன்னபிற என பல பொருட்களும், அவர்களின் ஒரு கிராமத்து வீட்டின் மாதிரியும் வைத்திருந்தார்கள்.



நடராஜர், துர்க்கை மற்றும் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட சிவன் உருவம்.

இறுதியாக தரை தளத்திற்கு வந்தோம். அங்கே அம்மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பல பழைய கற்சிலைகளை ஒரு கூடத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் பல பழைய நடராஜர் சிலைகள் இருந்தன. நடராஜர் தமிழ்நாட்டில் மட்டுமே பூஜிக்கப்படும் சிவனின் ரூபம் என்ற பொதுக்கருத்தை பொய்யக்குவதாக அது இருந்தது. மற்றொரு அறையில் அவர்களின் அரசர் காலத்து நாணயங்களை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அருங்காட்சியகத்தின் எல்லா அரங்குகளிலும் வெளிச்சம் குறைவான விளக்குகளே வைத்துள்ளனர். உள்ளே எடுக்கப்படும் படங்கள் பிளாஷ் உபயோகிக்காமல் எடுக்கப்படவேண்டும் என்று அறிவிப்பு வைத்திருக்கிறார்கள். அதனால் அங்கே படம் எடுக்க நாட்டம் இல்லாமல் இருந்தது. எடுக்கப்பட சில படங்களும் பளிச்சென்று இல்லை. எல்லாம் பார்த்து முடித்து நாங்கள் வெளியே வருவதற்கும் அருங்காட்சியகம் மூடப்படுவதற்கும் சரியாக இருந்தது.



மாலை ஆறு மணி. அடுத்தது எங்கே செல்லலாம் என யோசித்துக்கொண்டு இருக்கையில், அருங்காட்சியககத்திற்கு எதிரிலேயே எரியோடு ஒட்டிய ஒரு சிறிய பூங்கா இருந்தது. அந்த ஏரியின் பெயர் திகாலிபுகுரி. இங்கும் நுழைவுக்கட்டணம் உண்டு. பெரியவர்களுக்கு ரூ.10/-, சிறுவர்களுக்கு ரூ.5/-.

டயர்களின் இடுக்குகளில் வளர்க்கப்படும் செடிகள் 

மூங்கில் குழல்களில் வளர்க்கப்படும் செடிகள் 


ஏரியை சுற்றி நடை பாதையும் முன்புறம் சிறுவர் விளையாட்டு திடலும் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்றபோது சில சிறுமிகள் துடுப்புப் படகு செலுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஏரியின் பின்புறம் ராணுவ வீரர்களுக்கான ஒரு நினைவிடமும் சில போர் விமான மாதிரிகளும் வைக்கப்பட்டிருந்தன. அரைமணி நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு விடுதி வந்து சேர்ந்தோம்.

இரவு உணவுக்கு எங்கு செல்வது என சைவ உணவகங்களை கூகுள் மேப்ஸ்-ல் தேடி ரயில் நிலையத்திற்கு மறுபுறம் இருக்கும் ஒரு உணவகத்தை தேர்ந்தெடுத்து அங்கு சென்றோம். மயூர் ஹோட்டல் எனும் விடுதியின் உணவகம் அது. செல்லும் வழியெங்கும் சாலையில் மக்கள் பான் மென்று துப்பி வைத்திருக்கிறார்கள். சாலையில் நடப்பதற்கே அருவெறுப்பாக இருந்தது.

ரயில் நிலையத்தை நடை மேம்பாலத்தில் கடந்து மறுபுறம் இறங்கினால் அது பிரதான அங்காடிப் பகுதி. அதன் பெயர் பல்டன் பஜார். எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டமும் வாகன கூட்டமும் ஒன்றை ஒன்று முன்டியடிதுக்கொண்டிருந்தன. ஒருவழியாக அந்த உணவகத்தை தேடி கண்டுபிடித்து சென்றோம். அந்த உணவகத்தில் டெபிட் கிரெடிட் கார்டுகளை ஏற்பதில்லையாம். சாப்பிட்டவுடன் மேற்பார்வையாளர் ஒருவர் வந்து எவ்வளவு ஆனது என்று சொல்லி பணம் கேட்டார். பில் கேட்டர்தர்க்கு இதோ கொண்டுவருகிறேன் என்று பணத்துடன் சென்றவர் கவுன்ட்டர் அருகில் எங்கேயோ வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருண்தார். அவர் பில் பற்றி ஏதும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அதற்குமேல் அங்கு காத்திருப்பது வீண் என்று கிளம்பிவிட்டோம். எங்கள் பயணத்தின் முதல் நாள் நல்லபடியாக முடிந்தது.

பயணம் தொடரும்...