Tuesday, May 15, 2018

இசை என்னும் இன்ப வெள்ளம்

சில நாட்களுக்கு முன் எனக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு ஒலிப்படத்தின் (video) யூ டியூப் சுட்டி வந்தது.  சமீபத்தில் வந்த பத்மாவத் படத்தின் கூமர் பாட்டு வீணையில் வாசிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைப்பு சொன்னது. அந்த பாட்டு நன்றாக இருக்கும் என்பதால், வீணையில் எப்படி வாசிக்கப்பட்டுள்ளது என்ற பார்க்கும் ஆவலில் அந்த சுட்டியை தொடர்ந்தேன். 

வாசிப்பை பார்த்து அசந்துபோய்விட்டேன். இப்படி ஒரு திறமையா என்று. கலைஞரின் பெயர் ஸ்ரீவாணி. ஹைதராபதை சேர்ந்தவர். 

நான் ரசித்த அந்த ஒலிப்படம் உங்களுக்காக இதோ. நீங்கள் இதுவரை கூமர் பாடலை கேட்டதில்லை என்றால் முதலில் அதை கேட்டுவிட்டு பின்னர் அந்த பாடலின் வீணையிசை வடிவை கேளுங்கள். உங்களுக்காக இரண்டு ஒளிப்படங்களும் இங்கே.

கூமர் பாடல் (தமிழ்):



கூமர் பாடல் (ஹிந்தி):



வீணையிசை  வடிவம்:



யூ டுயூபில் அவரை பற்றி தேடியபோது, அவரது சேனல் கிடைத்தது. அதில் அவர் பல்வேறு பிரபல பாடல்களை வீணையில் அற்புதமாக வாசித்த ஒலிப்படங்கள் உள்ளன.

அவர் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த மேலும் இரு பாடல்களின்  வீணையிசை வடிவம் உங்களுக்காக. 

மரியான் படத்தில் வரும் "இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன" என்ற பாடல் வீனையிசையாக.



அவதாரம் படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ" பாடல் வீனையிசையாக.


நீங்களும் இந்த வீணையிசை வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Sunday, May 13, 2018

தங்க மழை பாரீர்!

From Google Images

“பொன்னர் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே”

சிவ பெருமானின் ஜடாமுடியில் மிளிரும் கொன்றை பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் இது. தற்போது தில்லியில் பிரதான சாலைகள் பலவற்றில் உள்ள கொன்றை மரங்களில் தங்கமே பூக்களாய் பூத்ததோ என்று கண்டு மயங்கும்படி கொன்றைப் பூக்கள் பூத்துச் சொரிகின்றன. இலைகள் ஏதுமின்றி வெறும் பூக்கள் மட்டுமே பூத்துக் குலுங்கும் கொன்றை மரத்தை கண்டு ரசிக்க கண் கோடி வேண்டும்.
From Google Images
மேலே உள்ள திருவாசக வரிகளின் மூலம் எனக்கு கொன்றை பூவை பற்றிய அறிமுகம் கிடைத்தாலும், அது பார்பதற்கு எப்படி இருக்கும் என்று எனக்குள் ஆவலை தூண்டியது பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் அதைப் பற்றிய வர்ணனையே. நான் பொன்னியின் செல்வன் படித்தது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன். அப்போதைய  காலகட்டத்தில் கணினியோ இணையமோ அரிது என்பதால், அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போனது.

ஐந்து வருடங்களுக்கு முன் நான் நாக்பூரில் இருந்தபோது, ஒரு ஏப்ரல் மாத மாலை நேரத்தில் (சுமார் நான்கு மணி இருக்கும்) பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் இலைகளே இல்லாமல், வெறும் பொன்னிற மஞ்சள் பூக்கள் மட்டும் பூத்துக்குலுங்கியதை கண்டு அதிசயிதுப்போனேன். மாலை வெயில் அம்மலர்களின் மீது பட்டு அதில் அந்த பூக்கள் ஜொலித்த காட்சி இன்னும் என் மனக்கண்ணிலிருந்து மறையவில்லை. அப்போதுதான் தோன்றியது, இவையே நான் காண விரும்பிய கொன்றை மலர்களாய் இருக்கலாம் என்று.

அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து, எங்கள் அலுவலகத்திலேயே இருந்த கொன்றை மரம் முதல் முறையாக பூத்தது. அப்போதுதான் தெரிந்தது நான் அன்று பார்த்தது கொன்றை மலர்களே என்று.
அலுவலக வளாகத்தில் பூத்த கொன்றை மலர்கள் 
தற்போது தில்லியில் பல முக்கிய சாலைகளில் கொன்றை பூத்துக் குலுங்குவதால் அவ்வழியாக பயணிக்கும்போதெல்லாம் அவற்றை கண்டு வியந்து ரசிப்பதே என் பொழுதுபோக்கு ஆகிவிட்டது.

இதைப்பற்றி இணையத்தில் தேடியபோது, ஆங்கிலத்தில் இதன் பெயர் கோல்டன் ஷவர் ட்ரீ என்பது தெரிந்தது. இதன் தாவரவியல் பெயர் காசியா Fபிஸ்டுலா என்பதாகும். இது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மரமாம். தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதியில் இவை காணக் கிடைக்குமாம்.

தில்லியில் பூத்த கொன்றை 
கேரளாவின் மாநிலப் பூ மற்றும் தாய்லாந்து நாட்டின் தேசியப் பூ ஆகிய சிறப்புகள் இந்த கொன்றை பூவுக்கு உண்டு. பல கோயில்களின் தல விருட்சம் என்னும் பெருமையும் கொன்றைக்கு  இதற்குள்ளது. விஷு பண்டிகையின்போது பூஜையில் கொன்றை பூ பயன்படுத்தப் படுவதாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சக அதிகாரி தெரிவித்தார். இதன் பட்டை, வேர், பூ மற்று காய் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

“புத்தம் புது பூமி வேண்டும், நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்” 
என்று ஒரு பாட்டு திருடா திருடா படத்தில் வரும். கொன்றை பூத்துக் குலுங்குவதை பார்க்கும்போது, தங்க மழை பொழிகிறது பாருங்கள் என்று கத்தவேண்டும் போல் தோன்றுகிறது.

From google Images
சரம் சரமாய் பூத்துத் தொங்கும் இந்த மலர்களை பார்த்துக்கொண்டு இருப்பதே மனதிற்கு அமைதி தருவதாக இருக்கிறது.  சாலைகளின் இருபுறமும் இந்த மரத்தை நட்டு வைத்தால், வெயில் காலத்தில் இந்த பூக்களை பார்த்து வெம்மையின் கொடுமையை மறந்து இருக்கலாம்.
From Google Images
அடுத்தமுறை நீங்கள் கொன்றைப் பூக்கள் பூத்துச் சொரிவதை பார்த்தால் ஒரு நிமிடமாவது நின்று அதன் அழகை ரசித்துவிட்டுச் செல்லுங்கள்.




Thursday, May 03, 2018

மஞ்சக்காட்டு மைனா




சில நாட்களுக்கு முன் அலுவலகத்திலிருந்து மெட்ரோவில் வீடு திரும்பும்போது கேட்ட உரையாடல் இது: (ஹிந்தியில் நடந்த உரையாடல் உங்களுக்காக தமிழில்)

நான் அண்ணிக்கு குடிச்சிட்டு வீட்டுக்கு போனேன். போய் படுத்துடலாம்னு நெனச்சேன். ஆனா நான் உள்ள நுழைஞ்சதுமே எல்லாரும் என்னை ஒருமாதிரி பார்த்தாங்க. நான் குடிச்சிட்டு வந்தத வீட்ல கண்டுபிடிச்சிட்டாங்கனு தெரிஞ்சிபோச்சு.

அப்பறம் என்ன ஆச்சி?

எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சேனு எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி. அது வெயில் காலம் வேற. வீட்ல ஏசி ஓடிட்டு இருந்தது. எல்லா கதவும் மூடி இருந்ததால், ட்ரிங்க்ஸ் வாசனை வீடெல்லாம் குப்புனு பரவிடுச்சி. நான் எக்கசெக்கமா குடிச்சிருக்கேன்னு அப்பதான் புரிஞ்சுது.
                                                                               

யாரும் ஒண்ணும் சொல்லலையா?

மொறச்சி பாத்தாங்க. அண்ணண் மட்டும் என் கிட்ட வந்து இவ்ளோ குடிக்காத. லிமிட்டுக்குள்ள வெச்சிக்கோன்னு சொன்னான். இப்பல்லாம் அளவோடதான் குடிக்கிறேன். 2க்கு மேல போறதில்ல. எப்பவாவது 3. (2, 3 என்பதின் பதவுரையை  அனுபவஸ்தர்கள் சொன்னால் என் பொது அறிவை மேம்படுதிக்கொள்வேன்)

நிஷா குடிப்பாளா?

அவ ஒரேயொரு வாட்டி டேஸ்ட் பாண்ணினா அவ்வளவுதான். அவளுக்கெல்லாம் புட்டில பால் ஊத்திதான் தரணும்.


இவையெல்லாம் பேசியது அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு இளம்பெண்கள். இதைதவிர அவள் அக்கா கல்லூரியில் படிக்கும்போது குடித்தது, ஒருமுறை அவள் (குடித்துவிட்டு?) கார் ஓட்டிச் சென்றபோது ஏதோ பிரச்சினை ஆகிவிட, அவள் அக்காவும், அக்கா  பையனும் உடன் இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு கொண்டிருந்தது, என தன் மற்றும் தன் குடும்பத்தினரின் இன்னும் சில பல குடி பிரதாபங்களை மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டாப்சும், கருப்பு பேன்ட்டும் அணிந்த, பருத்த உதடுகளில் கருஞ்சிவப்பு சாயம் பூசியிருந்த, கூந்தலை விரித்துபோட்டிருந்த அந்த பெண் சொல்லிக்கொண்டிருக்க, இன்னொருத்தி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே மானே தேனே பொன்மானே போல தோழி சில கேள்விகளையும் கேட்டாள். ரயிலில் கூட்ட இரைச்சலினாலும், தொடர்ந்து வரும் அறிவிப்புகளாலும் அவர்கள் பேசியதில் பல பகுதிகள் காதில் சரியாக விழவில்லை.
                                                                 Image result for men standing in train
இவர்கள் அருகிலேயே நம்ம ஊர்க்காரர்கள் இருவர் நின்றுக்கொண்டிருந்தனர். தில்லியில் மத்திய அரசு பணியில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் அணிந்திருந்த அடையாள அட்டை மூலம் தெரிந்தது. ஏதோ அலுவலக விஷயங்களையும் மற்ற விஷயங்களையும் பேசியவாறு வந்தார்கள், அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து தங்கியிருக்கிறார்கள் என்று அவர்கள் பேசியதிலிருந்து புரிந்தது.

அந்த பெண்கள் இறங்கவேண்டிய  நிறுத்தம் நெருங்கவும், அவர்கள் நம்மூர்காரர்களை தாண்டி செல்ல, நம்மாட்களில் இளையவரானவர் மஞ்சக்காட்டு மைனா போகுதே. நாமளும் இங்கயே இறங்கிடலாமா என மற்றவரை கேட்க, அவர் சிரித்துவிட்டு எதுவும் சொல்லாமல் இருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும் இளையவரின் கண் அந்த மஞ்சக்காட்டு மைனா மேல்தான் இருந்தது என்பதும் அவளைப் பார்த்து ஜொள் விட்டுக்கொண்டு இருந்தார் என்பதும் அப்போதுதான் தெரிந்தது.


அந்த பெண்களோ இரண்டு மூன்று நிறுத்தங்கள் கடந்துதான் இறங்கினார்கள். அவர்கள் இறங்கியதை அப்போதுதான் கவனித்த அந்த இளைய தமிழர், ஐயோ, இங்கதான் எறங்க போறாங்கனு தெரிஞ்சிருந்தா நாமளும் அவங்க பக்கத்துல போய் நின்னிருக்கலாமே என்று ஏக்கமாய் சொல்லிக்கொண்டிருந்தார் தன் நண்பரிடம். அவர்களும் ஓரிரண்டு நிறுத்தங்கள் தாண்டி இறங்கிவிட்டனர்.
                                                                                           Image result for ugly womens face
இத்தனைக்கும் அந்த மஞ்சக்காட்டு மைனா ஒன்றும் அழகி அல்ல. சுமார் என்று கூட சொல்ல முடியாது. விரித்துவிட்ட கூந்தலும் அடர் நிற லிப்ஸ்டிக்கும் அவளை விகாரமாக காட்டிக்கொண்டிருந்தன. ஊரை விட்டு வெகுதொலைவில் வந்திருப்பதால் மிகவும் காய்ந்து போய் கிடக்கிறாரோ என்னவோ நம்ம ஊர்காரர்.

குடித்துவிட்டு வரும் தங்கையை அளவோடு குடிக்கச் சொல்லும் அண்ணனையும், குடிக்காத பெண்ணை பாலை புட்டியில் ஊற்றி குடிப்பவள் என்று கிண்டல் செய்யும் பெண்ணையும் பார்க்கும்போது நாடு வல்லரசாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிகிறது.


Image courtesy: Google