Sunday, May 13, 2018

தங்க மழை பாரீர்!

From Google Images

“பொன்னர் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே”

சிவ பெருமானின் ஜடாமுடியில் மிளிரும் கொன்றை பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் இது. தற்போது தில்லியில் பிரதான சாலைகள் பலவற்றில் உள்ள கொன்றை மரங்களில் தங்கமே பூக்களாய் பூத்ததோ என்று கண்டு மயங்கும்படி கொன்றைப் பூக்கள் பூத்துச் சொரிகின்றன. இலைகள் ஏதுமின்றி வெறும் பூக்கள் மட்டுமே பூத்துக் குலுங்கும் கொன்றை மரத்தை கண்டு ரசிக்க கண் கோடி வேண்டும்.
From Google Images
மேலே உள்ள திருவாசக வரிகளின் மூலம் எனக்கு கொன்றை பூவை பற்றிய அறிமுகம் கிடைத்தாலும், அது பார்பதற்கு எப்படி இருக்கும் என்று எனக்குள் ஆவலை தூண்டியது பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் அதைப் பற்றிய வர்ணனையே. நான் பொன்னியின் செல்வன் படித்தது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன். அப்போதைய  காலகட்டத்தில் கணினியோ இணையமோ அரிது என்பதால், அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போனது.

ஐந்து வருடங்களுக்கு முன் நான் நாக்பூரில் இருந்தபோது, ஒரு ஏப்ரல் மாத மாலை நேரத்தில் (சுமார் நான்கு மணி இருக்கும்) பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் இலைகளே இல்லாமல், வெறும் பொன்னிற மஞ்சள் பூக்கள் மட்டும் பூத்துக்குலுங்கியதை கண்டு அதிசயிதுப்போனேன். மாலை வெயில் அம்மலர்களின் மீது பட்டு அதில் அந்த பூக்கள் ஜொலித்த காட்சி இன்னும் என் மனக்கண்ணிலிருந்து மறையவில்லை. அப்போதுதான் தோன்றியது, இவையே நான் காண விரும்பிய கொன்றை மலர்களாய் இருக்கலாம் என்று.

அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து, எங்கள் அலுவலகத்திலேயே இருந்த கொன்றை மரம் முதல் முறையாக பூத்தது. அப்போதுதான் தெரிந்தது நான் அன்று பார்த்தது கொன்றை மலர்களே என்று.
அலுவலக வளாகத்தில் பூத்த கொன்றை மலர்கள் 
தற்போது தில்லியில் பல முக்கிய சாலைகளில் கொன்றை பூத்துக் குலுங்குவதால் அவ்வழியாக பயணிக்கும்போதெல்லாம் அவற்றை கண்டு வியந்து ரசிப்பதே என் பொழுதுபோக்கு ஆகிவிட்டது.

இதைப்பற்றி இணையத்தில் தேடியபோது, ஆங்கிலத்தில் இதன் பெயர் கோல்டன் ஷவர் ட்ரீ என்பது தெரிந்தது. இதன் தாவரவியல் பெயர் காசியா Fபிஸ்டுலா என்பதாகும். இது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மரமாம். தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதியில் இவை காணக் கிடைக்குமாம்.

தில்லியில் பூத்த கொன்றை 
கேரளாவின் மாநிலப் பூ மற்றும் தாய்லாந்து நாட்டின் தேசியப் பூ ஆகிய சிறப்புகள் இந்த கொன்றை பூவுக்கு உண்டு. பல கோயில்களின் தல விருட்சம் என்னும் பெருமையும் கொன்றைக்கு  இதற்குள்ளது. விஷு பண்டிகையின்போது பூஜையில் கொன்றை பூ பயன்படுத்தப் படுவதாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சக அதிகாரி தெரிவித்தார். இதன் பட்டை, வேர், பூ மற்று காய் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

“புத்தம் புது பூமி வேண்டும், நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்” 
என்று ஒரு பாட்டு திருடா திருடா படத்தில் வரும். கொன்றை பூத்துக் குலுங்குவதை பார்க்கும்போது, தங்க மழை பொழிகிறது பாருங்கள் என்று கத்தவேண்டும் போல் தோன்றுகிறது.

From google Images
சரம் சரமாய் பூத்துத் தொங்கும் இந்த மலர்களை பார்த்துக்கொண்டு இருப்பதே மனதிற்கு அமைதி தருவதாக இருக்கிறது.  சாலைகளின் இருபுறமும் இந்த மரத்தை நட்டு வைத்தால், வெயில் காலத்தில் இந்த பூக்களை பார்த்து வெம்மையின் கொடுமையை மறந்து இருக்கலாம்.
From Google Images
அடுத்தமுறை நீங்கள் கொன்றைப் பூக்கள் பூத்துச் சொரிவதை பார்த்தால் ஒரு நிமிடமாவது நின்று அதன் அழகை ரசித்துவிட்டுச் செல்லுங்கள்.




8 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும், முதன்முதலாக கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி, திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

      Delete
  2. அருமையான கொன்றை மலர்கள்/ கொன்றை தொங்குவது அருமைஅயக இருக்கும்...கொன்றை பூ மலர்ப்பாதை ரொம்ப அழகாக இருக்கிறது. ஆம் கேரளத்தில் விஷுக்கனிக்கு கொன்றை வைப்பதுண்டு...தொடர்கிறோம்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக என் தளத்திற்கு வந்துள்ளீர்கள். அன்புடன் வரவேர்கிறேன்.

      உங்கள் கருத்திற்கும், தொடர்வதற்கும் நன்றி.

      Delete
  3. இது கொன்றைப்பூவா?! அப்ப ஆவாரம்பூ எது?!

    ReplyDelete
  4. கொன்றைப்பூ சரமாக ஓரே காம்பில் பல பூக்கள் இருக்கும். ஆவாரம் பூ தனித்தனியாக இருக்கும். ஆனால் பார்பதற்கு இரண்டும் கிட்டதிட்ட ஒரே மாதிரி இருக்கும்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜி அவர்களே.

    ReplyDelete
  5. உங்களின் எழுத்து, என்னையும் கொன்றை மலர்களை இரசிக்க வைத்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கிஷோர்குமார் அவர்களே.

      Delete