Sunday, August 26, 2018

மனமகிழ் பயணம் - 3

நவகிரஹ கோயில் & உமா நந்தா கோயில் 


முந்தைய பகுதிகள்: பகுதி-1   பகுதி-2

அடுத்த நாள் காலை சுமார் எட்டரை மணி அளவில் விடுதியிலிருந்து புறப்பட்டோம். உபெர் டாக்ஸி பிடித்து முதல் இடமாக குவஹாடியின் நவக்ரஹ கோயிலுக்கு சென்றோம். இந்த கோயில் பிரமபுத்திரா நதிக்கரையில் உள்ள சித்ரசால் மலை எனும் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. கோயிலின் வாசல் வரை வண்டி செல்லும் வசதி இருக்கிறது. 


நவகிரஹ கோயில் 

கோயில் வட்ட வடிவில் உள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்தால் ஒரு சிறு கூடம். அடுத்து கருவறை. கருவரைக்குள்ளே சென்றுதான் நவக்கிரககங்களை தரிசிக்கவேண்டும். இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால், நம்ம ஊர் கோயில்களில் இருப்பதுபோல் அல்லாமல் நவகிரகங்களும் லிங்க வடிவில் உள்ளன. நடுவில் சூரியனை குறிக்கும் ஒரு லிங்கமும் சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களை குறிக்கும் லிங்கங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக பூசாரிகள் இருக்கிறார்கள். பூஜை செய்பவர்களை லிங்கத்தின் அருகிலேயே அமரவைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். உள்ளே மின்விளக்குகள் எதுவும் இல்லை. தீபஒளியில் தான் தரிசனம் செய்யவேண்டும். அதனால் கோயிலின் உள்ளே இருட்டாகவே இருக்கிறது. 


கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. உள்ளே இருக்கும் ஒரே கடையில் 200 மி.லி. நல்லெண்ணெய் 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. இரண்டு புட்டி எண்ணெய் வாங்கி விளக்கில் விட்டோம். கோயிலை சுற்றி வரும்போது ஒருபுறம் குவஹாடி நகரமும் மறுபுறம் பிரம்மபுத்ரா நதியும் அழகான காட்சிகளாக கண்முன்னே விரிகின்றன. 


நவகிரஹ கோயிலிலிருந்து குவஹாடி நகரம் 

தரிசனம் முடித்து வெளியே வந்து ஓலா டாக்ஸி புக் செய்து காத்திருந்தால், வண்டி வருவதாக தெரியவில்லை. ஓட்டுனரை அழைத்து பேசினால், அவர் இருக்கும் இடத்திலிருந்து கோயில் தூரம் என்று கூறி வர மறுத்துவிட்டார். போனால் போகட்டும் போடா என்று எண்ணிக்கொண்டு அங்கேயே இருந்த ஒரு ஆட்டோ பிடித்தோம். சென்னையைப் போலவே இங்கும் ஆட்டோவில் மீட்டர் போட்டு ஓட்டும் பழக்கம் இல்லை. நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு நூறு ருபாய் கேட்டார். ஒலாவிலும் அதே பணம் கட்டியதால், பேரம் பேசாமல் புறப்பட்டோம். 


அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் உமா நந்தா கோயில். இது ஒரு அழகான சிவன் கோயில். பிரம்மபுத்ரா ஆற்றின் நடுவில் இருக்கும் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது இந்த கோயில். கோயிலை அடைய படகுப்பயணம் செய்ய வேண்டும். இரண்டு படகுத்துறைகளில் இருந்து அந்த கோயிலுக்கு படகுகள் செல்கின்றன. ஒன்று உமாநந்தா காட் எனப்படும் அரசு படகுத்துறை. மற்றொன்று தனியார் படகுத்துறை. இரண்டும் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. அரசு படகுத்துறை உசான் பஜார் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 


உமா நந்தா படகுத்துறை 

படகு சவாரி பயணச்சீட்டு தலைக்கு 20 ருபாய். இது இருவழி பயணத்துக்கான கட்டணம். தனியார் படகுகள் மிக அதிகமாக வசூலிப்பதாக இணையத்தில் சிலர் எழுதியிருந்தார்கள். 5 நிமிட படகு பயணத்தில் கோயிலை அடைந்தோம். பிரம்மபுத்ரா நதியின் நடுவில் உமா நந்தா கோயில் இருக்கும் மயில் தீவு

மரங்கள் நிறைந்த அழகான சிறு தீவுக்குன்று அது. தீவின் பெயர் மயில் தீவு (Peacock Island). இந்த தீவிற்கு ஒரு சிறப்பும் உண்டு. உலகிலேயே, மனிதர்கள் வாழும் மிகச்சிறிய ஆற்று தீவு இது. அடிவாரத்தில் இருந்து சுமார் 50-60 படிகள் ஏறினால் கோயிலை அடையலாம். உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் பிள்ளையார் சந்நதி. சன்னதிக்கு வெளியே ஒரு பெரிய எலி சிலை. மூலவரான சிவன் சன்னதியில் கருவறை பள்ளத்தில் அமைந்துள்ளது. சில படிகள் இறங்கி கருவறைக்குள் செல்லலாம். பக்தர்களை லிங்கத்தின் அருகிலேயே அமரவைத்து தரிசிக்க வைக்கிறார்கள். 


படிகளின் முடிவில் தெரிவது உமா நந்தா கோயில்

இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் இடதுபுறம் செல்லும் ஒரு சரிவில் சென்றால் அங்கே ஒரு ஹனுமார் கோயில் உள்ளது. இந்த தீவிலும் கோவிலுக்கு செல்லும் வழியில் பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. தரிசனம் முடித்து மலையை விட்டு இறங்கினால் வந்த படகிலேயே திரும்பிச் செல்லலாம். அடிவாரத்தில் இளநீர் மற்றும் தின்பண்டங்கள் விற்கும் கடைகள் உள்ளன. 


தீவின் கரையில் காத்திருக்கும் தனியார் படகுகள்

தரிசனம் முடித்து கரை திரும்புகையில் சூரியன் தலைக்கு மேல் வந்திருந்தார். வயிற்றில் அலாரம்  அடிக்க ஆரம்பித்ததால்  கூகுள் மேப்ஸ்-ல் அருகில் உள்ள சைவ உணவகங்களை தேடினேன். அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு உணவகத்தை காட்டியது அது. JBs என்ற அந்த உணவகத்தில் தென்னிந்திய உணவு வகைகளும் கிடைக்கின்றன. ஆர்டர் செய்த உணவுகளை கொண்டுவர அறை மணி நேரத்திற்கு மேல் ஆனது. சாப்பிட்டு முடித்து உபெர் டாக்ஸி அமர்த்திக்கொண்டு விடுதிக்கு வந்து சேர்ந்தோம். 


பயணம் தொடரும்...

4 comments:

 1. இனிய பயணம். எங்கள் கௌஹாத்தி பயணத்தில் நாங்கள் இங்கெல்லாம் செல்லவில்லை. உங்கள் மூலம் இந்த இடங்களுக்கும் சென்று வந்த மகிழ்ச்சி.

  படங்கள் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பயணக்கட்டுரை பதிவுகள் பார்த்து, நீங்கள் கண்டிப்பாக அஸ்ஸாமை அலசியிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். அடுத்தமுறை செல்லும்போது கண்டு களியுங்கள். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கட்.

   Delete
 2. சுவாரஸ்யமான இடங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete