Saturday, September 08, 2018

புதுப்புது அர்த்தங்கள்

என்னுடன் பணியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். ஆரம்ப காலத்தில் எல்லாரும் வெவ்வேறு இடங்களில் பணியில் இருந்தாலும், காலப்போக்கில் இட மாறுதல் பெற்றதில், நானும் ஒரு சில பெண்களும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றினோம். 

அவர்களில் இருவர் மிக நெருங்கிய இணைபிரியா தோழிகள். அவர்களின் பெயர் நீலா, மாலா என்று வைத்துக்கொள்வோம். நீலா மாலாவை விட வயதில் பெரியவர். கல்யாணம் ஆகாதவர். நாங்கள் ஒன்றாக பணியாற்றிய காலத்தில்தான் மாலாவிற்கு திருமணம் ஆகி வெளியூர் சென்றார். இருவரும் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வார்கள். கைபேசிகள் பெரிய அளவில் புழக்கத்தில் வராத காலம் அது.

அலுவலகத்தில் நான், தோழி நீலா, மற்றொரு தோழி ஷீலா, மூவரும் ஒரே உட்பிரிவில் வேலை செய்தோம். எங்களுக்குள் வயது வித்தியாசம் அதிகம் இல்லை என்பதால் எப்போதுமே எங்கள் உட்பிரிவு கலகலப்பாக இருக்கும்.

பட உதவி: கூகுள் 
ஒருநாள், நீலா இயல்புக்கு மாறாக சோகமாக காணப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லாததால், நான் அவரிடம் அதைப்பற்றி கேட்டேன். எங்களுக்குள் நடந்த உரையாடல்:

நான்: என்ன ஆச்சு? ஏன் காலையிலிருந்து இப்படி (D)டல்லா இருக்கீங்க?

நீலா: நேத்து சாயந்திரம் மாலாவோட பேசலாம்னு போன் பண்ணினேன். அவ என்னடான்னா என் வீட்டுக்காரர் வீட்ல இருக்காரு, எனக்கும் நெறைய வேலை இருக்கு. அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டா.

நான்: அதனாலென்ன? அவங்களுக்கு வீட்டு வேலை இருந்திருக்கும். இதுக்கு போயா இவ்வளவு பீலிங்?

நீலா: எத்தனை வாட்டி நான் வேலையா இருக்கும்போது அவ போன் பண்ணியிருக்கா தெரியுமா? ஒருவாட்டி கூட நான் இதுபோல சொன்னதில்ல. 

நான்: அதெல்லாம் அந்தந்த ஸிச்சுவேஷனண பொருத்தது. அதுக்காக ஏன் அவங்க சொன்னத தப்பா எடுத்துக்கறீங்க?

நீலா: நான் தான், க்ளோஸ் பிரெண்டுனு அவளுக்கு ரொம்ப இம்பார்டன்ஸ் குடுக்கறேன். ஆனா அவ அப்படி இல்லன்னு நேத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இத்தனை நாளா நான் எவ்வளோ இம்மெச்சூரா இருந்திருக்கேன்னு இப்பத்தான் புரியுது.

நான்: அப்படின்னா இப்ப (இந்த சம்பவத்திற்கு பிறகு) நீங்க மெச்சூர் ஆயிடீங்க.

நீலா: (அவரைப்பற்றி நான் ஏதோ குறைவாக மதிப்பிடுவதாக நினைத்து) இல்ல இல்ல. நான் எப்பவோ மெச்சூர் ஆயிட்டேன். (என மறுப்பு சொன்னார்)

அருகில் அமர்ந்திருந்த தோழி ஷீலா சட்டென்று நமுட்டு சிரிப்பு சிரிக்க, கண நேரத்தில் சுதாரித்துக்கொண்ட நீலா "நான் அதைச் சொல்லல" என்று சொல்லி ஷீலாவுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார். 

பட உதவி: கூகுள் 
சிரிக்கும்படி என்ன நடந்தது. எதற்காக ஷீலா சிரிக்கிறார். நீலா எதை மறுத்து, கூட சேர்ந்து சிரிக்கிறார் என்று முதலில் எனக்கு புரியவில்லை. நான் இருவரையும் குழப்பத்துடன் பார்க்க, நீலாவின் முக (B)பாவத்திலிருந்து எனக்கு விஷயம் புரிந்தது. ஷீலாவின் குறும்பும், நீலா சட்டென்று விஷயத்தை புரிந்துகொண்டதும் என்னையும் சிரிக்கவைத்தது. ஒரு கணத்தில் எங்கள் உட்பிரிவே கலகலப்பானது. அதுவரை சோகமாக இருந்த நீலா மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தார்.

உங்களுக்கும் விஷயம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். புரியாதவர்கள் பின்குறிப்பை படிக்கவும். 

இந்த சம்பவத்தைப்பற்றி பிற்பாடு யோசித்தபோது நீலாவின் வருத்ததிற்கு காரணம், மாலா இவருடன் பேசாதது அல்ல, மாறாக, அவர் பேசியதில், கணவர் வீட்டில் இருக்கிறார் என்ற வாக்கியம் இவர் மனதில் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் தான் என்று தோன்றியது. 

அந்த வாக்கியத்தின் மூலம், உனக்கு கல்யாணம் ஆகவில்லை. அதனால் அதிக வேலை இல்லை. ஆகவே உனக்கு பேச நேரம் இருக்கிறது. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அதனால்  வேலை அதிகம் இருப்பதால் பேச நேரம் இல்லை என மாலா மறைமுகமாக சொல்வதாக தவறாக புரிந்து கொண்டிருபார் போலும். அது அவர் ஆழ்மனதில்தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தையோ சுயபச்சாதாபத்தையோ  ஏற்படுத்தியிருக்கவேண்டும். 

அதுவே, அவர் மாலாவின்மேல் கோபமும் வருத்தமும் கொள்வதற்கு காரணமாக எனக்கு தோன்றியது.

அதன் பிறகு சில மாதங்களில் நீலாவிற்கும் கல்யாணம் ஆனது. 

பின்குறிப்பு: நாங்கள் இருவரும் மெச்சூர் என்ற ஆங்கில வார்த்தையை அறிவு முதிர்ச்சி என்ற அர்த்தத்தில் பேசிக்கொண்டிருக்க, ஷீலாவோ, "நான் எப்பவோ மெச்சூர் ஆயிட்டேன்" என்று நீலா சொன்னதை சிலேடையாக கொண்டு, பெண்கள் பருவம் அடைதலை குறிக்கும் பேச்சு வழக்கு அர்த்தத்தை எடுத்துக்கொண்டு சிரித்தார். நீலா உடனடியாக அதை புரிந்துகொண்டு நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று மறுத்து அவருடன் சேர்ந்து சிரித்தார்.

Sunday, September 02, 2018

தாயும் மகளும் பின்னே ஓர் மிதிவண்டியும்

பட உதவி: கூகுல் 


சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்தபோது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எங்கள் சாலைக்குள் திரும்பியபோது எதிரில் ஒரு தாயும் மகளும் வந்துகொண்டிருந்தனர். மகள் பதின்ம வயதுகளின் இறுதியில் இருப்பதாக தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பாள் போலும். மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வந்தாள். 


நான் அவர்களை கடக்கும்போதுதான் அந்த தாய் ஏதோ ஒரு வாக்கியத்தை பேசி முடித்தார். அநேகமாக ஏதோ குடும்பப் பிரச்சினை பற்றியோ அல்லது தனது தனிப்பட்ட கஷ்டத்தையோ மகளிடம் பகிர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு அந்த மகள் “just go with the flow ma” என்று ஆறுதலும் தைரியமும் தந்துகொண்டிருந்தாள். 


இந்த காட்சியும் உரையாடலும் நான் அவர்களை கடக்க எடுத்துக்கொண்ட ஓரு சில நொடிகளில் கவனித்ததுதான் என்றாலும், தாய் தன் பதின்ம வயது மகளிடம் வெளிப்படையாக ஒரு பிரச்சனையை விவாதிப்பதும் அதை அந்த இளம்பெண் புரிந்துகொண்டு முதிர்ச்சியுடன் ஆறுதலான பதில் தந்ததை கேட்டதும் எனக்கு ஏதோ ஒரு வித மன நிறைவை தந்தது.


எல்லா குடும்பங்களிலும் இப்படிப்பட்ட விஷயம் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நடக்கவேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன். இன்றைய பெற்றோர் குடும்ப கஷ்டங்களையோ, குடும்பத்திற்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் படும் அவஸ்தைகளையோ அல்லது தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளையோ குழந்தைகளிடம் சொல்லவதில்லை.


இன்றைய கீழ்தட்டு நடுதட்டு பெற்றோர்கள் பிள்ளைகள் கஷ்டப்படாமல் வளரவேண்டும் என்று நினைக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ள ஒரு புது மனோபாவம் இது. இன்றைய தாத்தா பாட்டிகளோ அல்லது அவர்களுக்கு முந்தைய தலைமுரையினரோ யாரும் அப்படி யோசித்ததாக தெரியவில்லை. கஷ்டப்பட்டால்தான் வாழ்க்கை என்னவென்று புரியும் என்ற தத்துவத்தை அவர்கள் பின்பற்றினர்.


பிள்ளைகளை பொத்திப்பொத்தி வளர்க்கும் இந்த புது சித்தாந்தத்தால், அவர்களுக்கு கஷ்டங்கள் என்றால் என்னவென்றே தெறியாமல் ஒரு மாய உலகில் வளர்கிறார்கள். அதனாலேயே அவர்கள் பிரச்சனைகளை சந்திப்பதற்கும் அவற்றை தீர்ப்பதற்கும் மிகவும் பயப்படுகிறார்கள். அதனால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து போக முனைகிறார்கள் அல்லது அவற்றை சமாளிக்க எப்போதும் யாரவது ஒருவர் துணையை அல்லது தயவை எதிர்பார்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.


சிறு வயதிலிருந்தே குடும்ப கஷ்டங்களை புரிந்துகொண்டும் அவற்றை பெற்றோர் சமாளிப்பதையும் பார்த்தும் வளரும் பிள்ளைகள் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் யதார்த்தத்தோடு இயைந்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அத்தகைய சூழ்நிலையை குழந்தைகளுக்கு உருவாக்குவது பெற்றோரின் கை(வாய்)களில்தான் இருக்கிறது. ஏனென்றால் அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை.