Saturday, June 16, 2018

மனமகிழ் பயணம் - 1

கடந்த மாதம், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல நினைத்து எங்கே செல்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். திடீர் முடிவு என்பதாலும், விடுமுறைக் காலம் என்பதாலும் அருகிலுள்ள எந்த இடம் செல்ல நினைத்தாலும், ரயில், விமானம் என எதிலும் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. மேலும் அங்கே விடுதி அறைகளுக்கும் யானை விலை கொடுக்கும்படி இருந்தது.

ஒரு வழியாக மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் செல்ல முடிவு செய்தேன். அங்கே இருக்கும் எங்கள் அலுவலக விருந்தினர் விடுதியில் தங்க இடம் கிடைத்ததால் இந்த முடிவு. ஷில்லாங் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. கொல்கத்தா சென்று அங்கிருந்து விமானம் மூலம் செல்லலாம் அல்லது அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாடி சென்று அங்கிருந்து சாலை வழியாக செல்லலாம்.

கல்கத்தா ஷில்லாங் விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் குவஹாடி வழியாக செல்லவேண்டிய நிர்பந்தம். குவஹாடி செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், குவஹாடியில் எங்கே தங்குவது என்று சிந்தனை மேலோங்கியது. காரணம், அங்கே ஓரிரு நாட்கள் தங்கி அங்குள்ள இடங்களையும் சுற்றிப்பார்க்க விரும்பியதால். 

சில இணையதளங்களில் என் செலவு வரம்புக்குள் விடுதி அறைகள் கிடைத்தாலும், அவற்றை பற்றி பயனாளர் கருத்துக்களை பார்த்தபோது ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றே தோன்றியது. இறுதியாக அஸ்ஸாம் சுற்றுலா துறையின் ஹோட்டலை தொடர்பு கொண்டபோது இடம் இருப்பதாக சொன்னார்கள். உடனே முன்பதிவு செய்தேன்.

கிளம்பும் நாளும் வந்தது. தில்லியிலிருந்து விமானம் மூலம் குவஹாடி சென்றடைந்தோம். குவஹாடி விமான நிலைய கட்டடம் பெருநகரங்களில் உள்ள ஒரு சிறிய மால் அளவிற்கே இருக்கிறது. வெளியேயும் விமான நிலையத்திற்கே உரிய பகட்டு எதுவும் இல்லாமல் மிக சாதாரணமாகவே உள்ளது. 

விமான நிலையத்தின் வருகை பகுதியில் அஸ்ஸாமின் கலை கலாசாரம் மற்றும் அதன் சிறப்பம்சமான காண்டாமிருகம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருட்கள். அவற்றை பற்றிய குறிப்புகளும் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.குவஹாடி விமான நிலையம் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்த ப்ரீ-பெய்டு டாக்ஸி பூத்தில் பார்த்தல், நகருக்கு செல்ல ரூ.550/- கட்டணம் என்று இருந்தது. ஒலா-வில் முயற்சி செய்து பார்த்ததில் நானூறு ரூபாய் சொச்சத்திற்கு வண்டி கிடைத்தது. பதிவு செய்துவிட்டு ஓட்டுனரை தொடர்பு கொண்டால், அவர் நான் செல்லுமிடம் வரமுடியாது என்று கூறி பதிவை ரத்து செய்துகொள்ளுமாறு சொன்னார். 

ஆரம்பமே இப்படி இருக்கிறதே என்று நினைத்தவாறே வேறு வழியில்லாமல் ப்ரீ-பெய்டு டாக்ஸியில் விடுதிக்கு சென்றோம். குவஹாடியில் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தாலும் நாங்கள் சென்றது மதிய நேரம் என்பதால் சுள்ளென்ற வெயில். வண்டியும் நான்-ஏசி என்பதால் அஸ்ஸாமின் வெயிலை அனுபவித்தவாறே விடுதி சென்றடைந்தோம்.

பயணம் தொடரும் ...

Sunday, June 03, 2018

வழிகாட்டும் கதைகள் -1


நாம் எந்தனையோ கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டுமே நம் மனதில் நிற்பதுடன் நம் வாழ்கையின் பல பிரச்சனையான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சில கதைகளை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அவற்றில் சிலவற்றை நீங்கள் ஏற்கனேவே வெவ்வேறு வடிவில் படித்திருக்கலாம், கேட்டிருக்கலாம். ஆனாலும் மீண்டும் ஒருமுறை இத்தளத்தில் படித்து பயன் பெறுங்கள்.

இந்த பதிவில் நான் பகிரப்போகும் கதை வானொலியில் முன்பு திரு தென்காசி சுவாமிநாதன் அவர்கள் வழங்கிக்கொண்டிருந்த ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியில் சொல்லியது.

புத்தர் சொல்லாமல் சொன்ன தத்துவம்
 
Courtesy: Google Images
ஒருமுறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்கு கால்நடையாக சென்றுகொண்டிருந்தனர். வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஆற்றை கடப்பதற்கு ஏற்ற இடத்தை அடைந்தபோது, கரையில் ஒரு இளம்பெண் அழுதுகொண்டிருப்பதை பார்த்தார்கள். புத்தர் அந்த பெண்ணிடம் அவள் அழுதுகொண்டிருப்பதற்கான காரணத்தை கேட்டார்.

அவள், “நான் ஆற்றிற்கு அந்தப்பக்கம் இருக்கும் ஊருக்கு செல்லவேண்டும். ஆற்றில் நீர் அதிகமாக இருக்கிறது. எனக்கு நீச்சலும் தெரியாது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்கிறேன்” என்றாள்.

உடனே புத்தர், “கவலைப்படாதே பெண்ணே. நாங்களும் ஆற்றை கடந்து செல்லவேண்டும். நீ என் தோள் மீது ஏறி உட்கார்ந்துகொள். நான் உன்னை ஆற்றின் அக்கரையில் விட்டுவிடுகிறேன்” என்றார்.

உடனே அந்த இளம்பெண்ணும் தன கவலை தீர்ந்தவளாய் புத்தரின் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். புத்தரும் ஆற்றை கடந்ததும் அவளை இறக்கிவிட்டார். அவள் மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லி தன் வழியே சென்றாள்.

புத்தரும் சீடர்களுடன் தன் வழியில் பயணத்தை தொடர்ந்தார். மாலை வேளையில் அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய ஊரை அடைந்தார்கள். அப்போதுதான் அவர் தன் சீடர்களில் ஒருவர் மிகவும் குழப்பமாய் இருப்பதை கவனித்தார். அந்த சீடரை அழைத்து குழப்பத்திற்க்கான காரணத்தை அவர் கேட்டார்.

சீடர், “குருவே, நாமோ சன்யாசிகள். ஆனால், இன்று காலை ஆற்றை கடக்கும்போது நீங்கள் ஒரு இளம்பெண்ணை தோள் மீது ஏற்றிகொண்டீர்கள். அது எப்படி சரியாகும்?” என்றார்.

அதற்கு புத்தர், “நான்தான் ஆற்றை கடந்ததும் அவளை இறக்கி விட்டுவிட்டேனே. நீ இன்னுமா சுமந்துகொண்டிருக்கிறாய்?”, என்றார்.

நம்மில் பெரும்பாலானோர் அந்த சீடரைப் போலத்தான் இருக்கிறோம். எந்த  விஷயத்தை எங்கே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரியாமல், பல சமயம் அவற்றிற்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுப்பதால் நாமும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப் படுத்துகிறோம். அதை உணர்ந்து பக்குவம் அடையும்போது நாமும் அந்த சீடனின் நிலையில் இருந்து புத்தனின் நிலைக்கு உயர்கிறோம்.