Wednesday, January 31, 2018

காரணமின்றி காரியமில்லை

shoulderless, top, midi, தோளில்லா மேல் ஆடை, மிடி,

சில நாட்களுக்கு முன் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கண்ட காட்சி இது. அப்போது இரவு மணி எழரை இருக்கும். ரஜெளரி கார்டன் நிலையத்தை ரயில் அடைந்தபோது எதிர்புற மேடையில் ஒரு இளம்பெண் தன் ஆண் துணையுடன் நின்றுகொண்டிருந்தாள். அவன் ஜனவரி மாத மாலை நேர குளிரை தாக்குப்பிடிக்க 2 ஸ்வெட்டர்கள் அணிந்திருக்க, அவளோ தோள் பகுதி இல்லாத மேல் ஆடையும் முட்டிக்கு மேல் முடியம் ஒரு இறுக்கமான மிடியும் மட்டுமே அணிந்திருந்தாள்.

இங்கே இருக்கும் குளிருக்கு அத்தனைபேரும் முகத்தை தவிர தலை முதல் பாதம் வரை மூடிக்கொண்டு திரிய, அவள் மட்டும் அவ்வாறு குளிருக்கான எந்த உடையும் அணியாமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. உச்சகட்ட குளிர்காலத்திலேயே இப்படி காற்றாட ஆடை அணிந்தால் வெயில் காலத்தில் என்ன உடுத்துவாளோ. யோசிக்கக்கூட முடியாது போலிருக்கிறதே.

அந்தப் பெண்ணைப் பார்த்ததும், பேய் படங்களில், புதைக்கப்பட்ட எழும்பக்கூடு திடீரென்று பூமியை பிளந்துகொண்டு வெளியே வருவது போல, பல வருடங்களுக்கு முன் சேனல்கள் தாவிக் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு திரைப்பட காட்சி, நினைவுக்கு வந்தது.

girls group, கல்லூரி மாணவிகள்

அந்தக் காட்சியின் சாரம்சம் இதுதான். கல்லூரி மாணவிகள் மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வார்கள். ஒரு இடத்தில்  ஸ்வெட்டர் அணிந்த சில மாணவிகள் உட்கார்ந்து அரட்டை அடிதுக்கொண்டிருக்க, ஸ்வெட்டர் அணியாத அறைகுறை ஆடை அணிந்த மாணவி ஒருத்தி அந்தப்பக்கம் வருவாள். கூட்டத்தில் இருக்கும் ஒருத்தி அவளுக்கு குளிரவில்லையா என்று கேட்க, அதற்கு அவள், “நீங்கல்லாம் வெளிய ஸ்வெட்டர் போட்டிருக்கீங்க நான் உள்ள ஸ்வெட்டர் போட்டிருக்கேன்” என்று சொல்லி மறைத்து வைத்திருக்கும் மது / மது கலந்த குளிர்பான புட்டியை எடுத்து காட்டுவாள்.

எதுவும் காரணம் இன்றி நடப்பதில்லை என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சில நொடிகள் நான் அந்த படக்காட்சியை பார்த்ததற்கு காரணம் இத்தனை ஆண்டுகள் கழித்து அந்தப் பெண்ணை சூழலுக்கு பொருந்தாத உடையில் பார்த்து உங்களுக்கு இந்த பதிவின் மூலம் நான் சொல்லவேண்டும், அதை நீங்கள் படிக்கவேண்டும் என்பதற்காகத்தான் போலிருக்கிறது.

யாருக்குத் தெரியும்? நீங்கள் இதை படிப்பதற்கும் உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு விஷயத்திற்கு காரணமாக இருக்கலாம்.

படங்கள் கொடுத்து உதவியது கூகிள் 

Wednesday, January 24, 2018

இரவு... இளம்பெண்... 2 நிமிடங்கள்

அந்த சாலை ரயில்நிலையத்திற்கு நேர் எதிரே அரை கிலோமீட்டர் தூரம் சென்று பிரதான சாலையை தொடும். சாலையில் ரயில் நிலையத்தின் அருகிலும், பின்பு பாதி சாலைத் தாண்டி ஒரு இடத்திலும், அதன் பிறகு பிரதான சாலையை தொடும் இடத்திலும் மட்டுமே சாலை விளக்குகள் இருக்கும். சாலையின் மற்ற பகுதிகளில் தினமும் அமாவாசைதான்.

ரயில் நிலையத்திலிருந்து சாலையின் பாதி தூரத்திற்கு மேல் வரை இருபுறமும் புதர் மண்டிக்கிடக்கும் காலி மனைகள்.

இரவு சுமார் எட்டரை மணி இருக்கும். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். அந்நேரம் சாலை வெறிச்சோடி இருக்கும். அந்த நிலையத்தில் இறங்குபவர்கள் மிகவும் குறைவு. அதிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் வாகனங்களிலோ அல்லது ரிக்ஷாக்களிலோ சென்றுவிடுவார்கள். நடந்து செல்வபவர்கள் ஒன்றிரண்டு பேர்தான்.

முதல் வெளிச்சப்பகுதியை தாண்டி இருளில் நடந்துகொண்டிருந்தேன். திடீரென்று பின்னல் யாரோ அவசர அவசரமாக நடந்து வரும் செருப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு இளம்பெண். நான் என் நடையை தொடர, அவள் இன்னும் வேகமாக என்னை நோக்கி நடப்பது அவள் காலனிகளின் சத்தம் மூலம் தெரிந்தது.

இருளில் தனியாக நடக்க பயப்படுகிறாள் போலும்,அதனால்தான் என் பின்னாலேயே வருகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ இடைவெளியை குறைத்துக்கொண்டே வந்து எனக்கு பக்கவாட்டில் நடக்க ஆரம்பித்தாள். அவள் பக்கத்தில் ஏன் நடக்கவேண்டும் என்று நினைத்து நான் வேகத்தை கூட்டினேன். அவளும் வேகத்தைக் கூட்டி எனக்கு குறுக்காக நடக்க ஆரம்பித்தாள். 

சரி, அவள் முன்னே போகட்டும் என்று நான் மெதுவாக நடந்தால், அவளும் வேகத்தை குறைத்து என்னுடனேயே நடக்கலானாள். என்னடா இது வம்பாக போய்விட்டது என்று மறுபடியும் வேகமாக நடந்தால் திரும்பவும் அவள் என்னைத் தாண்டி குறுக்கே நடந்தாள். இப்படியே அவள் என்னோடு ஓடிப் பிடித்து ஆட்டம் கட்டிக்கொண்டு இருந்தாள்.

வடிவேலு காமெடியில் வருவதுபோல் திடீரென்று என்னிடம் நாம மலை உச்சியிலிருந்து குதிச்சி குதிச்சி விளையாடலாமா என கேட்பாளோ என்று தோன்றியது. அனால் அங்கேதான் மலை எதுவும் இல்லையே. அதற்கு பதில் அங்கே உள்ள கட்டடங்கள் எல்லாமே மிக உயரமானவை. மலைக்கு பதில் கட்டடத்தில் ஏறி குதிக்கலாம் என்பாளோ என்ற எண்ணமும் கூடவே வந்தது.

இப்போது எனக்கு லேசாக பயம் வந்தது. இவள் கொள்ளைக்காரியாக இருப்பாளோ என்ற சந்தேகம் தோன்றியது.  ஆள் அரவமற்ற அந்த பகுதியில் அவள் கத்தியோ துப்பகியோ காட்டி மிரட்டி கையில் இருப்பவற்றை பரித்துக்கொண்டால் என்ன செய்வது. 

அந்நேரம் என்னிடம் பெரிதாக ஒன்றும் இல்லை. அதனால் பயம் இன்னும் அதிகமானது. மீண்டும்  வடிவேலு காமெடி போல என்னிடம் ஒன்றும் தேறவில்லை என்ற கடுப்பில் என்னை தாக்கிவிட்டு சென்றால் என்ன செய்வது என்று அந்த  சில நொடிகளில் மனம் தாறுமாறாக யோசிக்கத் தொடங்கியது.

தில்லியில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் உள்ளது. ஆண்களுக்கும்  அதே நிலைதானா என்று சத்தம்போட்டு கத்தினேன் என் மனதுக்குள்ளேயே. 

அதற்குள் அந்த அடுத்த தெருவிளக்கு வந்தது. அவள்  எனது வலப் பக்கத்திலிருந்து இடது பக்கம் விருட்டென்று ஓடி சாலையை கடந்து எதிரே இருந்த ஒரு பெரிய குடியிருப்புக்குள் நுழைந்தாள். அப்போதுதான் என் மனம் அமைதியானது. 

அவள், அந்த 2 நிமிட நேரத்தில்  எனக்கு ஒரு மௌன திகில் நாடகத்தை நடத்திக் காட்டிவிட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

Friday, January 12, 2018

எழுமின், விழிமின், ஓயாது உழைமின்.




இன்று சுவாமி விவேகனந்தரின் பிறந்த நாள். நம் நாட்டில் இந்நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனால் அவரிப்பற்றிய என் எண்ணங்களை இன்று பதிவேற்றுகிறேன்.

அவருடைய பிறப்பு வளர்ப்பு பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இல்லாவிட்டாலும் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள புத்தகங்களும் இணைய தளங்களும் உள்ளன. அதனால் அந்த தகவல்களை நான் இங்கு தரவில்லை.

அவர் மட்டும் பிறக்கவில்லை என்றால் நம் பாரத தேசத்தின் ஆன்மீக பெருமை உலகத்திற்கும், ஏன் நம் நட்டு மக்களுக்குமே கூட தெரியாமல் போயிருக்கும். அவர் கலந்துகொண்ட சிகாகோ மாநாடு நம் தேசத்தைப் பற்றி மேற்கத்திய நாடுகள் கொண்டிருந்த பார்வையை புரட்டிப் போட்டது. பாரத தேசம் என்றாலே சன்யாசிகளும் பாம்பாட்டிகளும் இருக்கும் நாடு என்ற என்னத்தை மாற்றி நமது பொக்கிஷமான உயர்ந்த ஆன்மீக தத்துவங்களை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றவர்.

தேச சேவைக்காக துறவறம் பூண்டு சன்யாசி ஆனார். ஆனாலும் ஆஷ்ரமத்தில் இருந்துகொண்டு மக்களை தன்னைத்தேடி வரவைக்கும்  மற்ற சன்யாசிகளைப் போல அல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் மக்களை நோக்கி சென்றார். அவருடைய எல்லா சிறப்பம்சங்களிலும் இதுவே தலையாயது என்று நினைக்கிறேன்.

கிட்டதிட்ட ஆயிரம் ஆண்டு காலமாக நம் பாரம்பரியத்திற்கும் கலாசாரத்திற்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் நம்மை ஆண்டு வந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட மனச்சோர்வையும் நம் பாரம்பரியம், பெருமைகள் மற்றும் பலங்கள் பற்றிய மறதியையும் களைய முயற்சி மேற்கொண்ட ஒரே மனிதர் அவர்தான் என்றால் அது மிகை ஆகாது.

பாரத தேசத்தின் பலம் அதன் ஆன்மீக தத்துவங்களில் உள்ளது என்பதை மக்களுக்கு நினைவூடியவர். அந்த ஆன்மீக தத்துவங்களை மீண்டும் நம் வாழ்க்கையோடு இணைத்துக்கொள்வதன் மூலம் தான் நாம் புத்துணர்வு பெற்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுவித்துகொள்ள முடியும் என்று வழி காட்டியவர்.

மற்ற ஆன்மீகவாதிகள் எல்லாம் கடவுளை அடைய பூஜை புனஸ்காரம், மனத்தூய்மை, பக்தி, பற்றின்மை ஆகியவற்றை உபதேசித்துக்கொண்டிருக்க, இவரோ கர்ம யோகமே கடவுளை அடையும் வழி என்று உரக்கச் சொன்னவர். அவ்வழியே வாழ்ந்தும் காட்டியவர். கர்ம யோகம் என்பது அவரவர்க்கான கடமையை செவ்வனே செய்வது என்பதே. பகவத்கீதை சொல்வதுபோல் கடமையை செய், பலன் தானாகவெ தொடரும் என்பதுதான் ஆது.

ஒரு இயந்திரத்தின் பாகங்கள் தத்தம் வேலையை  சரியாகச் செய்தால், அந்த ஒட்டுமொத்த இயந்திரம் ஒழுங்காக இயங்கி அதன் வெளியீடு என்னவோ அதை கச்சிதமாக தரும். இதைத்தான் அவர் மக்களுக்கு புரியவைக்க முயற்சித்தார். எல்லாரும் அவரவர் கடமையை சரியாகச் செய்தால் அதன் தாக்கம் இந்த சமுதாயத்தில், மாநிலத்தில், நாட்டில் நடக்கவேண்டிய விஷயங்களை அதுவாகவே நிகழ்த்திக்காட்டும். ஆனால் இதுவரை மக்கள் இந்த விஷயத்தை புரிந்துகொண்டதாக தெரியவில்லை.

அவருடைய இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒரு உண்மையான சன்யாசியாக, எந்த ஒரு ஊரிலும் நிரந்தரமாக தங்கியிராமல் நாடு முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தார். மக்களோடு மக்களாக கலந்து பழகினார். அவர்களுக்கு உடல் பலத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறினார். ஒரு பலம்பொருந்திய உடலில்தான் பலம்கொண்ட மனம் இருக்கும், அதுதான் தன்னம்பிக்கை தந்து எல்லா தடைகளையும் மீறி தன்  கடமைகளை செய்யவைக்கும் என்று நினைவூடியவர். அவரைப்போல் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவர் வேறு யாரும் இருந்ததாக தெரியவில்லை.

ஒவ்வருவரும் தம் அளவில் அவரின் ஒருசில வழிகாட்டுதல்களை பின்பற்றினாலும் விரைவில் நம் தேசத்தில் ஒரு நல்ல மாற்றம் வரும் என்பது உறுதி.

அவரின் ஒருசில பொன்மொழிகள் உங்களுக்காக:

  • எழுமின், விழிமின், ஓயாது உழைமின்.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
  • உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
  • நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
  • பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
  • கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
  • உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
  • அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
  • மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
  • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
  • அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
  • உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
  • உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

Tuesday, January 09, 2018

உலக புத்தக கண்காட்சி 2018


உலக புத்தக கண்காட்சி 2018 தில்லி பிரகதி மைதான்-ல் ஜனவரி 6-ம் தேதி துவங்கியது. ஜனவரி 14-ம் தேதி வரை நடக்கிறது. தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust, India) என்ற அமைப்பு இந்த கண்காட்சியை நடத்துகிறது. கண்காட்சி நேரம் தினமும் மதியம் 11 மணி முதல் இரவு 8 மணி வரை.
  
நேரம் கிடைத்ததால் ஞாயிறன்று மாலையே  மெட்ரோ ரயில் மூலம் அங்கு சென்றேன். தில்லி மெட்ரோ ரயிலின் நீல தடத்தில் பிரகதி மைதான் என்ற ரயில் நிலையம் உள்ளது. அதிலிருந்து வெளியே வந்தால் அந்த வழி நேராக பிரகதி மைதான்–ன் 10வது  வாயிலில் சென்று சேர்க்கிறது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வாயில் அருகிலேய கண்காட்சிக்கான நுழைவு சீட்டு விற்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.3௦/-, சிறியவர்களுக்கு ரூ.2௦/-. அங்கேயே நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு பிரகதி மைதான்-ன் 10வது வாயில் நோக்கி நடந்தேன்.

அப்போது மாலை 5 மணி. அந்நேரம் கண்காட்சிக்குச் செல்வபவர்கள் கூட்டத்தை விட அதிலிருந்து திரும்பி வருபவர்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து கண்காட்சி நடக்கும் திடலை அடைய, வேகத்தை பொறுத்து பத்து நிமிடம் வரை ஆகலாம்.

செல்லும் வழி நெடுகிலும் நொறுக்குத்தீனி கடைகளும் பிளாட்பார புத்தக கடைகளும் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. அந்த புத்தக கடைகளில் பெரும்பாலும் புதினப் புத்தகங்களே விற்கப்படுகின்றன. அனால் அவற்றின் விலை கண்காட்சி அரங்கங்களில் விற்கப்படும் விலையில் பாதியோ அல்லது இன்னும் குறைவோதான்.

செல்லும் வழியிலேயே கண்காட்சி பற்றிய தகவல்கள் கொண்ட பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பலர், அவர்கள் அங்கு வந்ததன் நினைவாக, அவற்றின் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டிருந்தனர். 

உள்ளே பல்வேறு பதிப்பகங்களின் அரங்கங்கள் வெவ்வேறு கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் உள்ளன. தமிழ் பதிப்பாளர்கள் யாரும் அரங்கு வைத்ததாக தெரியவில்லை. சாஹித்ய அகடமி அரங்கில் தமிழ் உட்பட பல்வேறு மொழி புத்தகங்கள் இருந்தன. 

மக்களை ஈர்ப்பதற்காக அந்த அரங்கின் வெளியே புத்தங்கங்களை அடுக்கி வைத்தாற்போல் ஒரு அமைப்பை செய்து வைத்திருந்தார்கள். அதை கடந்து சென்ற பெரும்பாலானோர் அதன் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டனர்.

சிறுவர்கள் பிரிவு என்று ஒரு பகுதி வைத்திருந்தாலும் அங்கும் எல்லா விதமான புத்தகங்களும் கலந்திருந்ததாவே எனக்கு தோன்றியது. சிறுவர் புத்தகங்கள் என்றால் மூன்று/நான்கு  வயது குழந்தைகள் விரும்பும் படங்களுடன் இருக்கும் அரிச்சுவடி, எண்கள், பழங்கள், காய்கறிகள், பூக்கள், வாகனங்கள், வண்ணங்கள், வடிவங்கள்  போன்றவ்ற்றை கற்றுக்கொள்ள உதவும் புத்தகங்களும், ஆங்கிலத்தில்  குழந்தை பாடல்கள் புத்தகங்களும் உள்ளன.

அதுபோல் பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் சிறுவர் கதை புத்தகங்கள் உள்ளன. இடைப்பட்ட வயதில் இருக்கும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எதுவும் தென்படவில்லை. அவ்வயது குழந்தைகளுக்கான புத்தகங்களே இல்லையோ என்று தோன்றுகிறது.
பிகாசஸ் பதிப்பக அரங்கத்தில் பார்வையாளர்கள் எல்லாருக்கும் ஒரு அட்டை கிரீடம் தந்தனர். பலர் அதை தலையில் சூடியபடியே உலவிக்கொண்டிருந்தனர்.

பல அரங்கங்களில் புதினப் புத்தகங்கள் ரூ.1௦௦/- க்கு விற்கப்படுகின்றன. எல்லா புத்தகங்களுக்கும் 1௦% தள்ளுபடி உள்ளது. சில பதிப்பாளர்கள் அதைவிட அதிக தள்ளுபடியில் விற்கின்றனர். கண்காட்சி கூடத்தின் உள்ளேயும் சில பழைய புத்தகங்கள் விற்கும் அரங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

புத்தகங்களை தவிர ஒரு சில கடைகளில் திசைகாட்டி, மணல் கடிகாரம், பைனாகுலர் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. ஒன்றிரண்டு கடைகளில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதவிதமான எழுது பொருட்கள் கிடைக்கின்றன.

இந்த வருட கண்காட்சியின் கருப்பொருள் “சுற்றுச்சூழல் மற்றும் வாநிலை மாற்றம்”. இதற்காகவே பிரத்யேகமாக ஒரு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயில் சூழல்சார் வாழ்கையை நினைவுபடுத்தும் வகையில் மூங்கில்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயும் முழுவதும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. அந்த கூடத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதன் அருகிலேயே ஐரோப்பிய ஒன்றியதில்லிருந்து வந்திருந்த பதிப்பகங்களின் அரங்கங்கள் இருக்கின்றன. இந்த வருட கண்காட்சியின் சிறப்பு அழைப்பாளர் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்.

 நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சில அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதன. நான் சென்ற அன்று ஒரு அரங்கத்தில் பெண் கவிஞர்களின் கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எட்டு மணிக்கு எல்லா அரங்கங்களையும் மூடிவிட்டார்கள். நேரமின்மை காரணமாக சில அரங்கங்களை பார்க்க முடியவில்லை.

நான் குழந்தைகளுக்காக சில புத்தகங்களும்,  திரு சுந்தர்லால் பண்டிட் எழுதிய How India lost her freedom என்ற புத்தகமும், டிராவல் ஹவுஸ் என்ற சுற்றுலா மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய புத்தகத்தையும் வாங்கினேன்.

மெட்ரோ ரயில் நிலையம் வரும் வழியில் ஒருவர் குழந்தைகள் அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் ஒலி எழுப்பும் ஊதல்களை விற்றுக்கொண்டு இருந்தார். விலை 20 ரூபாய். அதிலும் ஆண் குழந்தை குரல் வேண்டுமா பெண் குழந்தை குரல் வேண்டுமா என கூவி விற்றுக்கொண்டு இருந்தார்.

மீண்டும் மெட்ரோ ரயில் பிடித்து இரவு 9.15 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

நன்றி கூகுள்: படங்கள் 1, 2 & 5