Saturday, March 17, 2018

பரீட்சைக்கு நேரமாச்சு


தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு போதுக்தேர்வுகள் நேற்று (16.03.2018) துவங்கின. முதல் தேர்வாக தமிழ் முதல் தாள் நேற்று நடந்தது. இதைப்பற்றி தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை கேட்டு சிரிப்பதா, கோபப்படுவதா, வருத்தப்படுவதா என்று புரியவில்லை. விஷயம் இதுதான். நேற்றைய தேர்வில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் சொன்னார்களாம். அதை சில மாணவர்களிடம் பேட்டி வேறு எடுத்து ஒளிபரப்பினார்கள்.


புத்தகத்தில் பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் கேள்விகளை கேட்காமல் வேறு கேள்விகள் கேட்டு விட்டார்களாம். அதுவும் எப்படிப்பட்ட கேள்விகள் தெரியுமா? ஒரு மதிப்பெண் கேள்விகள். பெரும்பாலும் ஒற்றைச்சொல் விடை கொண்டவை.



ஒரு மதிப்பெண் கேள்விகள் அந்த பாடத்தின் அடிநாதமாக இருக்கும் விஷயங்கள் பற்றி தான் இருக்கும். ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்கு அப்படிப்பட்ட ஒரு விடை எழுதுவது கடினம் என்றால் அவர்களின் தரம் பற்றி என்ன சொல்வது. இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி எதிர்காலத்தில் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கப்போகும் விஷயங்களை புரிந்துகொண்டு  சுயமாக முடிவெடுப்பார்கள் என்று தெரியவில்லை.

                                                                              

எத்தனையோ முறை நமது கல்வி முறை மாற்றப்பட வேண்டியதைப்பற்றி பேசப்பட்டிருந்தாலும், அதை செய்வதற்கு யாரும் தயாராக இருப்பதாக  தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பாடத்திட்டம் மாற்றப்படுகிறதே தவிர, கற்பிக்கும் முறையிலோ, தேர்வு முறையிலோ எந்த மாற்றமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை. நம் சமூகத்திற்கு என்று மதிப்பெண் மீதான மோகம் தீர்ந்து அறிவு மீதான தாகம் வருகிறதோ, அன்றுதான் ஒரு விடிவு வரும் என்று தோன்றுகிறது.

2 comments:

  1. கல்வி மாற்றத்தில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலைப்பாடு

    அவரவர் பதவியை காப்பாற்றுவதிலேயே அன்றைய பொழுது கடந்து விடுகிறது இதுவே உண்மைநிலை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். எல்லாரும் இப்போதைக்கு எதாவது செய்தால் போதும் என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்கள். உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பதில்லை.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லெர்ஜீ அவர்களே.

      Delete