Monday, March 19, 2018

அவள் தந்த முத்தம்

Courtesy: Google Images
இன்றைய பதிவு நான் பார்த்த ஒரு குறும்படம் பற்றியது. படத்தின் பெயர் கிஸ்.  படத்தின் பெயர் தான் ஆங்கிலத்தில். படம் என்னவோ தமிழ் படம் தான்.

சமூகத்தின் கீழ்தட்டில் இருக்கும் சாதாரண இளவட்டங்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை இயல்பாக சித்தரிக்கும் ஒரு குறும்படம். கதாநாயகன் தண்ணீர் குப்பி விநியோகம் செய்யும் ஒரு விடலை. அவன் பெயர் படம் முழுக்க எங்குமே சொல்லப்படவில்லை. கதாநாயகி பிரியா வீட்டுவேலை செய்யும் ஒரு விடலி. ஒரே ஒரு முறை கதாநாயகன் அவளை பெயர் சொல்லி அழைப்பதால் அது நமக்கு தெரிகிறது. எப்போதும்போல் கதாநாயகன் கதாநாயகியை காதலிக்கிறான். அதை அவன் அவளுக்கு தெரிவித்ததுமே, அதை எதிர்பார்த்திருந்தவளாய், அவளும் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் எற்றுக்கொள்கிறாள்.

ஒருநாள் இருவரும் கடற்கரைக்கும் போகிறார்கள். கடற்கரையில் இருவரும் கதாநாயகனின் கைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கையில், அவன் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவள் அவன் கன்னத்தில் முத்தம் தந்துவிட்டு ஓடுகிறாள். அவளை துரத்திச் செல்கையில் அவன் கைபேசி அலை நீரில் விழுந்திவிடுகிறது.

பழுதான கைபேசியை சரி செய்த கடைக்காரன், அதை திருப்பிக் கொடுக்க இரண்டாயிரத்து ஐநூறு ருபாய் கேட்கிறான். காரணம் கைபேசியில் இருந்த அந்த முத்தக்காட்சி வீடியோ. கேட்ட பணத்தை தராவிட்டால் வீடியோவை இணையத்தில் ஏற்றிவிடுவதாக மிரட்டுகிறான். கதாநாயகன் நண்பர்களிடம் அழுதுகொண்டே விஷயத்தை சொல்ல அவர்கள் சென்று பிரச்னையை முடித்துவைக்க பார்க்கிறார்கள். அனால் அவர்கள் சென்றவுடன் கடைக்காரன் கேட்ட தொகை 2500-ல் இருந்து 5000 ஆகிவிடுகிறது. காதலிக்கு தெரிந்தால் அவள் தற்கொலை செய்துகொள்வாள் என்று பயப்படுகிறான் அவன். இரண்டாயிரம் ருபாய் கொடுத்து கைபேசியை திரும்பப்பெற முயற்சிக்கிறான் கதாநாயகன். ஆனால் கடைக்காரனோ பிடிவாதமாக இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் காதலியிடம் நடந்த விஷயத்தை சொல்லி அழுகிறான்.

அவள் அவனை அழைத்துக்கொண்டு கடைக்கு வருகிறாள். அவளை பார்த்ததும் கைபேசியை சரி செய்வதற்கான தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு கைபேசியை திருப்பி தருகிறான். அனால் அவளோ கடைக்காரன் வைத்திருக்கும் அந்த வீடியோவை உடனே அழிக்கச் சொல்கிறாள். அவன் பிறகு செய்வதாய் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அவளிடமும் அவன் அந்த வீடியோவை  இணையத்தில் ஏற்றப்போவதாக மிரட்ட, கதாநாயகி பிரச்சினையை எப்படி முடிக்கிறாள் என்பதுடன் முடிகிறது. படம். என்ன செய்கிறாள் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தில் எல்லாருமே மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நாயகியும் நாயகனும். நிலைமை கைமீறி போனதால் நாயகன் அழுதாலும், கடைக்காரன் நாயகியை திட்டும்போது பொங்குவது, சூழ்நிலைகள் சாதுவையும் முரடனாக்கிவிடும் என்று காட்டுகிறது. கதாநாயகி அவள் நிலையையொத்த பெண்களுக்கே உரிய தைரியத்துடன் வலம் வருகிறாள். நாயகனுடன் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும்போது, அவன் பக்கம் திரும்பும்போது சிடுசிடுப்பதும் மறுபுறம் திரும்பி சந்தோஷமும் காதலும் கலந்த புன்னகை பூப்பதும் அழகு.

கடைக்காரன் வீடியோவை அழிக்க மறுக்கும்போது நாயகி நாயகனை பார்த்து கம்ப்யூட்டரில் இருக்கும் வீடியோவை தேடி அழிக்க தெரியுமா என்று கேட்கிறாள். அவனும் நன்றாக தெரியும் என்கிறான். அவ்வளவு தெரிந்தவன், கைபேசியை சரிசெய்ய கொடுக்கும்போது அதில் இருக்கும் மெமரி கார்டை எடுத்துவிட்டு தரவேண்டும் என்று தெரியாதா. இத்தனைக்கும் அவன் கைபேசியை கடைக்காரனிடம் தரும்போது பேட்டரியையும் சிம் கார்டையும் கழற்றிவிட்டுத்தான் தருகிறான்.

நாயகனின் நண்பர்கள் கதாபாத்திரங்களும் மிகையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவன் ஆறுதல் சொல்வது, ஒருவன் ஜாக்கிரதை உணர்வுடன் யோசிப்பது, மற்றொருவன் சண்டைக்கு தயாராவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நாயகனுக்கு உதுவுகிறார்கள்.

நாயகி கடைக்காரனிடம் வாக்குவாதம் செய்யும்போதே எனக்குள் இருந்த இயக்குன(ன்)ர் விழித்துக்கொண்டான். நான் ஊகித்தது போலவே படம் முடிந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.


நீங்களும் குறும்படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.




2 comments:

  1. விளையாட்டு எவ்வளவு விபரீதத்தை கொடுக்கிறது.

    நாளை கணினியில் பார்க்கிறேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, கில்லெர்ஜீ அவர்களே.

      Delete