Tuesday, January 09, 2018

உலக புத்தக கண்காட்சி 2018


உலக புத்தக கண்காட்சி 2018 தில்லி பிரகதி மைதான்-ல் ஜனவரி 6-ம் தேதி துவங்கியது. ஜனவரி 14-ம் தேதி வரை நடக்கிறது. தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust, India) என்ற அமைப்பு இந்த கண்காட்சியை நடத்துகிறது. கண்காட்சி நேரம் தினமும் மதியம் 11 மணி முதல் இரவு 8 மணி வரை.
  
நேரம் கிடைத்ததால் ஞாயிறன்று மாலையே  மெட்ரோ ரயில் மூலம் அங்கு சென்றேன். தில்லி மெட்ரோ ரயிலின் நீல தடத்தில் பிரகதி மைதான் என்ற ரயில் நிலையம் உள்ளது. அதிலிருந்து வெளியே வந்தால் அந்த வழி நேராக பிரகதி மைதான்–ன் 10வது  வாயிலில் சென்று சேர்க்கிறது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வாயில் அருகிலேய கண்காட்சிக்கான நுழைவு சீட்டு விற்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.3௦/-, சிறியவர்களுக்கு ரூ.2௦/-. அங்கேயே நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு பிரகதி மைதான்-ன் 10வது வாயில் நோக்கி நடந்தேன்.

அப்போது மாலை 5 மணி. அந்நேரம் கண்காட்சிக்குச் செல்வபவர்கள் கூட்டத்தை விட அதிலிருந்து திரும்பி வருபவர்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து கண்காட்சி நடக்கும் திடலை அடைய, வேகத்தை பொறுத்து பத்து நிமிடம் வரை ஆகலாம்.

செல்லும் வழி நெடுகிலும் நொறுக்குத்தீனி கடைகளும் பிளாட்பார புத்தக கடைகளும் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. அந்த புத்தக கடைகளில் பெரும்பாலும் புதினப் புத்தகங்களே விற்கப்படுகின்றன. அனால் அவற்றின் விலை கண்காட்சி அரங்கங்களில் விற்கப்படும் விலையில் பாதியோ அல்லது இன்னும் குறைவோதான்.

செல்லும் வழியிலேயே கண்காட்சி பற்றிய தகவல்கள் கொண்ட பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பலர், அவர்கள் அங்கு வந்ததன் நினைவாக, அவற்றின் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டிருந்தனர். 

உள்ளே பல்வேறு பதிப்பகங்களின் அரங்கங்கள் வெவ்வேறு கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் உள்ளன. தமிழ் பதிப்பாளர்கள் யாரும் அரங்கு வைத்ததாக தெரியவில்லை. சாஹித்ய அகடமி அரங்கில் தமிழ் உட்பட பல்வேறு மொழி புத்தகங்கள் இருந்தன. 

மக்களை ஈர்ப்பதற்காக அந்த அரங்கின் வெளியே புத்தங்கங்களை அடுக்கி வைத்தாற்போல் ஒரு அமைப்பை செய்து வைத்திருந்தார்கள். அதை கடந்து சென்ற பெரும்பாலானோர் அதன் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டனர்.

சிறுவர்கள் பிரிவு என்று ஒரு பகுதி வைத்திருந்தாலும் அங்கும் எல்லா விதமான புத்தகங்களும் கலந்திருந்ததாவே எனக்கு தோன்றியது. சிறுவர் புத்தகங்கள் என்றால் மூன்று/நான்கு  வயது குழந்தைகள் விரும்பும் படங்களுடன் இருக்கும் அரிச்சுவடி, எண்கள், பழங்கள், காய்கறிகள், பூக்கள், வாகனங்கள், வண்ணங்கள், வடிவங்கள்  போன்றவ்ற்றை கற்றுக்கொள்ள உதவும் புத்தகங்களும், ஆங்கிலத்தில்  குழந்தை பாடல்கள் புத்தகங்களும் உள்ளன.

அதுபோல் பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் சிறுவர் கதை புத்தகங்கள் உள்ளன. இடைப்பட்ட வயதில் இருக்கும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எதுவும் தென்படவில்லை. அவ்வயது குழந்தைகளுக்கான புத்தகங்களே இல்லையோ என்று தோன்றுகிறது.
பிகாசஸ் பதிப்பக அரங்கத்தில் பார்வையாளர்கள் எல்லாருக்கும் ஒரு அட்டை கிரீடம் தந்தனர். பலர் அதை தலையில் சூடியபடியே உலவிக்கொண்டிருந்தனர்.

பல அரங்கங்களில் புதினப் புத்தகங்கள் ரூ.1௦௦/- க்கு விற்கப்படுகின்றன. எல்லா புத்தகங்களுக்கும் 1௦% தள்ளுபடி உள்ளது. சில பதிப்பாளர்கள் அதைவிட அதிக தள்ளுபடியில் விற்கின்றனர். கண்காட்சி கூடத்தின் உள்ளேயும் சில பழைய புத்தகங்கள் விற்கும் அரங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

புத்தகங்களை தவிர ஒரு சில கடைகளில் திசைகாட்டி, மணல் கடிகாரம், பைனாகுலர் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. ஒன்றிரண்டு கடைகளில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதவிதமான எழுது பொருட்கள் கிடைக்கின்றன.

இந்த வருட கண்காட்சியின் கருப்பொருள் “சுற்றுச்சூழல் மற்றும் வாநிலை மாற்றம்”. இதற்காகவே பிரத்யேகமாக ஒரு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயில் சூழல்சார் வாழ்கையை நினைவுபடுத்தும் வகையில் மூங்கில்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயும் முழுவதும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. அந்த கூடத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதன் அருகிலேயே ஐரோப்பிய ஒன்றியதில்லிருந்து வந்திருந்த பதிப்பகங்களின் அரங்கங்கள் இருக்கின்றன. இந்த வருட கண்காட்சியின் சிறப்பு அழைப்பாளர் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்.

 நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சில அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதன. நான் சென்ற அன்று ஒரு அரங்கத்தில் பெண் கவிஞர்களின் கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எட்டு மணிக்கு எல்லா அரங்கங்களையும் மூடிவிட்டார்கள். நேரமின்மை காரணமாக சில அரங்கங்களை பார்க்க முடியவில்லை.

நான் குழந்தைகளுக்காக சில புத்தகங்களும்,  திரு சுந்தர்லால் பண்டிட் எழுதிய How India lost her freedom என்ற புத்தகமும், டிராவல் ஹவுஸ் என்ற சுற்றுலா மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய புத்தகத்தையும் வாங்கினேன்.

மெட்ரோ ரயில் நிலையம் வரும் வழியில் ஒருவர் குழந்தைகள் அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் ஒலி எழுப்பும் ஊதல்களை விற்றுக்கொண்டு இருந்தார். விலை 20 ரூபாய். அதிலும் ஆண் குழந்தை குரல் வேண்டுமா பெண் குழந்தை குரல் வேண்டுமா என கூவி விற்றுக்கொண்டு இருந்தார்.

மீண்டும் மெட்ரோ ரயில் பிடித்து இரவு 9.15 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

நன்றி கூகுள்: படங்கள் 1, 2 & 5

4 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. எல்லா வருடமும் புத்தக கண்காட்சிக்கு செல்வது வழக்கம். தமிழகம் சென்றுவிட்டதால் இம்முறை செல்ல முடியவில்லை. தமிழக பதிப்பாளர்கள் வருவது மிகவும் குறைவே. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக மூன்று நான்கு பதிப்பகங்கள் - அதுவும் பிரபலமில்லாத பதிப்பகங்கள் மட்டுமே வருகிறார்கள்.

    உங்கள் மூலம் புத்தகக் கண்காட்சி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete