Thursday, January 04, 2018

ஒரு அப்பாவியின் அனுபவம்



இந்த சம்பவம் நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நான் அப்போதுதான் என் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தேன். மேல்படிப்பு படிக்க தகுதியும் விருப்பமும் இருந்தாலும் அப்போதைய சூழ்நிலை காரணமாக வேலை தேடிக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருந்தேன்.

அன்று ஜூலை மாதத்தில் ஒரு சனிக்கிழமை. மதிய உணவிற்கு பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் வெட்டியாக இருந்தபோது திடீரென்று என் நண்பன் வந்தான். அவனுடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அக்காலத்தில் தொலைப்பேசி என்பது ஒரு ஆடம்பரப் பொருள். அலைபேசிகள் அறியப்படாத காலம். அதனால் அவன் என்னை சந்திக்க நேரில் வந்தான்.

வந்தவன் கையில் ஒரு நாளிதழ். அதில் ஒரு பிரபல நிறுவனத்தில் பயிற்சிநிலை அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரம் வந்திருந்தது. வின்னப்பம் சமர்பிக்க அன்றுதான் கடைசி நாள். அவன் தன்னுடைய விண்ணப்பத்தை தயார் செய்து கொண்டுவந்திருந்தான். நானும் உடனடியாக விண்ணப்பம் தயார் செய்தேன்.

இருவரும் கிளம்பி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த நிறுவனத்திற்கு போனோம். நுங்கம்பாக்கம் என்றதும் திருமலை படத்தில் விவேக் நேர்காணலுக்காக செல்லும் அந்த ஏ.பி.சி பிரைவேட் லிமிடெட் என்று நினைத்துவிடாதீர்கள். இது வேறு நிறுவனம். விவேக்கை போல் அல்லாமல் நாங்கள் எந்த பிரச்சனையும் இன்றி அந்த இடத்தை அடைந்தோம்.

அந்த நிறுவனம் நான்காம் தளத்தில் இருந்தது. நாங்கள் அங்கு சென்று எங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தோம். வெளியே வந்ததும் நிறுவனத்தின் வாயில் எதிரிலேயே லிப்ட் இருந்தாதல் அதில் செல்ல நினைத்தோம். வரும்போது படி ஏறி வந்ததால் அந்த ஆசை.

கீழே செல்ல பொத்தானை அழுத்திவிட்டு காத்திருந்தோம். ஏனோ சிறுதுநேரம் ஆகியும் லிப்ட் எங்கள் தளத்துக்கு வரவில்லை. சரி. படிகளிலேயே இறங்கி செல்வோம் என முடிவுசெய்து இறங்கினோம். மூன்றாவது தளத்தை நாங்கள் அடைந்தபோது அங்கே லிப்ட் வந்து சேர்ந்து கதவுகளும் திறந்துகொண்டன.

அதை பார்த்ததும் பாய்ந்து சென்று லிப்டில் நுழைந்தோம். லிப்டில் ஏறியதும் ஏதோ உலகக்கோப்பையை வென்றது போன்ற உணர்வு எங்களுக்கு. காரணம், அன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு லிப்ட் பயணம் என்பது அபூர்வமான ஒன்று.


அனால் அந்த உணர்வு ஒரு நொடிதான் நீடித்திருக்கும். அடுத்த நொடி எங்களுக்கு குழப்பமும் அதிர்சியும்தான். காரணம் கண்டுபிடிக்க முடிகிறதா?

ஏனென்றால் லிப்ட் மேலே செல்ல ஆரம்பித்தது. எங்கள் இருவருக்குமே லிப்ட் பயன்படுத்திய அனுபவம் அதிகம் இல்லை. அதனால் குழம்பிவிட்டோம். நாங்கள் கீழே செல்வதால் லிப்டும் கீழே செல்கிறது என்று நினைத்து ஏறிவிட்டோம்.

அதற்குள் லிப்ட் நான்காம் தளத்தை அடைந்தது. கதவுகள் திறந்துகொன்டதும் எந்த யோசனையும் இல்லாமல் நாங்கள் புயல் வேகத்தில் வெளியே வந்து மீண்டும் படிகள் வழியே இறங்க ஆரம்பித்தோம். நாங்கள் வெளியே வந்த வேகத்தை பார்த்தவர்கள் எங்களை ஏதோ பேயோ பிசாசோ துரத்துகிறது என்று நினைத்திருப்பார்கள்.

நாங்கள் நான்காம் தளத்தில் லிப்டிற்காக பொத்தான் அழுதியதால்தான் லிப்ட் நான்காம் தளம் வந்து கதவு திறந்தது. அடுத்து அது கீழேதான் சென்றிருக்கும். அதை நாங்கள் உணரவில்லை. ஒருவேளை அது மேலே போவதாக இருந்தால்கூட லிப்டிலேயே இருந்திருந்தால் சற்று கூடுதலாக லிப்டில் பயணிக்கும் வாய்ப்பும் கூடுதல் சந்தோஷமும் கிடைத்திருக்கும். ஆனால் மிகவும் அப்பாவிகளாக நாங்கள் இருந்ததால் எங்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை. இப்ப ரொம்ப தெளிவானு கேட்காதீங்க. இப்பவும் நான் அப்பாவிதான்.

இந்த கூத்தை எல்லாம் பார்த்த அந்த நிறுவனத்தின் காவலாளி மிரட்சியுடன் எங்களை பார்த்தார். சில வினாடிகளுக்கு முன் படியில் இறங்கி சென்றவர்கள் எதற்கு லிப்ட் வழியாக மேலே வந்தார்கள்? எதற்கு இவ்வளவு அவசரமாக இறங்கி ஓடுகிறார்கள் என்று புரியாமல் விழித்தார். அவர் பார்த்த அந்த மிரண்ட பார்வையை என்றும் மறக்க முடியாது. அந்த காவலாளி பெண்ணாக இருந்திருந்தால் அவர் பார்வையை மருண்ட பார்வை என்று கவித்துவமாக வர்ணிக்கலாம். :-) அனால் அந்த காவலாளியோ ஆண். :-( அதனால் அந்த பார்வையை மிரண்ட பார்வை என்றுதான் சொல்லியாகவேண்டும்.

தரை தளம் வந்ததும்தான் நாங்கள் எங்கள் அறியாமையை உணர்ந்தோம். அப்போதுதான் அந்த காவலாளி ஏன் எங்களை அப்படி பார்த்தார் என்றும் புரிந்தது. எங்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அங்கேயே சத்தமாக சிரித்துவிட்டோம். இப்போது கூட நங்கள் சந்திக்கும்போது இந்த சம்பவத்தை சொல்லி சிரித்து மகிழ்வோம்.


சில சமயம் நம் அறியாமையால் நடக்கும் நிகழ்வுகளால்தான் நாம் எப்போது வேண்டுமானலும் நினைத்து சிரிக்க முடிகிறது.

Images courtesy: Google Images

4 comments:

  1. இந்த மாதிரி சம்பவங்கள் பலரது வாழ்விலும் உண்டு நண்பரே நான் முதன் முதலில் மின்தூக்கியில் சென்றது 1996 மும்பையில் ஆனால் தெளிவாக போய் வந்தேன் காரணம் அழைத்துப் போனவர் தெளிவானவர்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.

      Delete
  2. மின் தூக்கியில் முதல் பயணம் - நகைச்சுவை. பல விஷயங்களை முதன் முதலில் பார்க்கும்போது இப்படித்தான் அப்பாவியாக நடந்து கொள்கிறோம். தமிழகத்திலிருந்து தில்லி வந்த புதிதில் இப்படி பல அனுபவங்கள்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பல சமயங்களில் நடந்ததை சிறிது நேரம் கழித்து யோசிக்கும்போதுதான் நாம் என்ன செய்தோம், ஏன் அவ்வாறு நடந்தது என்று புரிகிறது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete