Friday, June 22, 2018

வழிகாட்டும் கதைகள் - 2

ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணி வரை மெகா டிவியில் பட்டி மன்றம் நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். பெரும்பாலும் அதில் கம்பராமாயணம் சம்பந்தப்பட்ட தலைப்புகளே இருக்கும். கடந்த ஞாயிரன்றும் அவ்வாறே. பட்டிமன்ற நடுவர் முனைவர் கு.ஞானசம்பந்தன். வாத பிரதிவாதங்கள் எல்லாம் முடிந்து இறுதியில் அவர் உரையாற்றும்போது சொன்ன ஒரு குட்டிக்கதை (சிறிய மாறுதல்களுடன்) உங்களுக்காக.

வெயில்காலம். மதிய நேரம். ஒரு ஏழை மனிதர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் உடுத்தியிருப்பது ஒரு வேஷ்டி மட்டுமே. வெயிலின் கொடுமை அவரை வாட்டுகிறது.

நன்றி: கூகுல் படங்கள் 

அப்போது, குதிரையின் மேல் அமர்ந்து பயணிக்கும் ஒரு ஜமீந்தார் அவரைக் கடந்து செல்கிறார். ஜமீன்தாரை பார்த்த அந்த ஏழை, "ஐயா, வெயிலில் செருப்பு இல்லாமல் நடப்பது கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் குதிரையின் மேல் அமர்ந்து செல்கிறீர்கள். உங்களுக்கு செருப்பு அவசியம் இல்லை. அதனால் உங்கள் செருப்பை எனக்கு தந்து என் மீது கருணை காட்டுங்கள்" என்று வேண்டினார்.

உடனே அந்த ஜமீன்தாரும் தனது செருப்பை ஏழைக்கு தந்தார்

"ஐயா, நான் மேலாடையின்றி இருக்கிறேன். வெயில் தாங்க முடியவில்லை. நீங்களோ நல்ல ஆடைகளை அணிந்து இருக்கிறீர்கள். பின்னால் ஒருவர் உங்களுக்கு குடை வேறு பிடித்துக்கொண்டு இருக்கிறார். அதனால் உங்கள் மேலாடையை எனக்கு தந்து உதவுங்களேன்" என்றார் ஏழை.

மேலாடையையும் கழற்றி தந்தார் ஜமீன்தார். அவர் செல்ல எத்தனிக்க, ஏழை "ஐயா, குதிரையின் மேல் பயணிப்பதால் நீங்கள் விரைவாக வீடு சென்றுவிடுவீர்கள். நானோ நடந்து செல்வதால் அதிக நேரம் ஆகும். அதனால் உங்கள் குடையையும் எனக்கு தந்தால் நன்றாயிருக்கும்", என்றார்.

குடையும் கைமாறியது.

ஜமீன்தார் புறப்பட, ஏழை "கேட்டதும் செருப்பு, மேலாடை, குடை கொடுத்த நீங்கள் உங்கள் குதிரையையும் எனக்கு கொடுத்தால் நான் மகிழ்வேன்" என்றார்.

குதிரையை விட்டு இறங்கிய ஜமீன்தார், கோபத்தில் தன்னிடம் இருந்த சாட்டையால் "இவ்வளவு பேராசையா?" என்றபடி அந்த ஏழையை அடித்தார். உடனே ஏழை, "நன்றி ஐயா, நன்றி ஐயா" என்று கத்தினார்.

குழம்பிப்போன ஜமீன்தார், "உன்னை அடிக்கும் எனக்கு எதற்கு நன்றி சொல்கிறாய்?" என்றார்.

"நீங்கள் அடிக்காமல் போயிருந்தால், நீங்கள் போன பிறகு, இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கேட்டிருந்தால் குதிரை கிடைத்திருக்குமோ என்று என்னை நானே நொந்துகொண்டு இருப்பேன். நீங்கள் அடித்ததால் இனி அந்த எண்ணம் எனக்கு வராது" என்றார் ஏழை.

எதிர்மறை அனுபவங்களும் சிலசமயம் நம் மன அமைதிக்கு வழி வகுக்கின்றன.

4 comments:

  1. கதை இரசிக்க வைத்தது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

      Delete
  2. நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கட்-ஜி.

      Delete