Sunday, June 03, 2018

வழிகாட்டும் கதைகள் -1


நாம் எந்தனையோ கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டுமே நம் மனதில் நிற்பதுடன் நம் வாழ்கையின் பல பிரச்சனையான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சில கதைகளை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அவற்றில் சிலவற்றை நீங்கள் ஏற்கனேவே வெவ்வேறு வடிவில் படித்திருக்கலாம், கேட்டிருக்கலாம். ஆனாலும் மீண்டும் ஒருமுறை இத்தளத்தில் படித்து பயன் பெறுங்கள்.

இந்த பதிவில் நான் பகிரப்போகும் கதை வானொலியில் முன்பு திரு தென்காசி சுவாமிநாதன் அவர்கள் வழங்கிக்கொண்டிருந்த ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியில் சொல்லியது.

புத்தர் சொல்லாமல் சொன்ன தத்துவம்
 
Courtesy: Google Images
ஒருமுறை புத்தரும் அவரது சீடர்களும் ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்கு கால்நடையாக சென்றுகொண்டிருந்தனர். வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஆற்றை கடப்பதற்கு ஏற்ற இடத்தை அடைந்தபோது, கரையில் ஒரு இளம்பெண் அழுதுகொண்டிருப்பதை பார்த்தார்கள். புத்தர் அந்த பெண்ணிடம் அவள் அழுதுகொண்டிருப்பதற்கான காரணத்தை கேட்டார்.

அவள், “நான் ஆற்றிற்கு அந்தப்பக்கம் இருக்கும் ஊருக்கு செல்லவேண்டும். ஆற்றில் நீர் அதிகமாக இருக்கிறது. எனக்கு நீச்சலும் தெரியாது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்கிறேன்” என்றாள்.

உடனே புத்தர், “கவலைப்படாதே பெண்ணே. நாங்களும் ஆற்றை கடந்து செல்லவேண்டும். நீ என் தோள் மீது ஏறி உட்கார்ந்துகொள். நான் உன்னை ஆற்றின் அக்கரையில் விட்டுவிடுகிறேன்” என்றார்.

உடனே அந்த இளம்பெண்ணும் தன கவலை தீர்ந்தவளாய் புத்தரின் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். புத்தரும் ஆற்றை கடந்ததும் அவளை இறக்கிவிட்டார். அவள் மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லி தன் வழியே சென்றாள்.

புத்தரும் சீடர்களுடன் தன் வழியில் பயணத்தை தொடர்ந்தார். மாலை வேளையில் அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய ஊரை அடைந்தார்கள். அப்போதுதான் அவர் தன் சீடர்களில் ஒருவர் மிகவும் குழப்பமாய் இருப்பதை கவனித்தார். அந்த சீடரை அழைத்து குழப்பத்திற்க்கான காரணத்தை அவர் கேட்டார்.

சீடர், “குருவே, நாமோ சன்யாசிகள். ஆனால், இன்று காலை ஆற்றை கடக்கும்போது நீங்கள் ஒரு இளம்பெண்ணை தோள் மீது ஏற்றிகொண்டீர்கள். அது எப்படி சரியாகும்?” என்றார்.

அதற்கு புத்தர், “நான்தான் ஆற்றை கடந்ததும் அவளை இறக்கி விட்டுவிட்டேனே. நீ இன்னுமா சுமந்துகொண்டிருக்கிறாய்?”, என்றார்.

நம்மில் பெரும்பாலானோர் அந்த சீடரைப் போலத்தான் இருக்கிறோம். எந்த  விஷயத்தை எங்கே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரியாமல், பல சமயம் அவற்றிற்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுப்பதால் நாமும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப் படுத்துகிறோம். அதை உணர்ந்து பக்குவம் அடையும்போது நாமும் அந்த சீடனின் நிலையில் இருந்து புத்தனின் நிலைக்கு உயர்கிறோம்.

4 comments:

  1. நல்லதொரு பகிர்வு. தேவையில்லாத விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டிருப்பது குப்பைகளைச் சேகரிப்பதற்கு ஈடாகும்.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நாகராஜ். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. அருமையான வாழ்வியல் உண்மை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete