Tuesday, February 13, 2018

ஜீ... பூம்... பா...


சில நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு வித்தியாசமான சிலிர்ப்பான அனுபவம் இது. அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தன் நண்பர் ஒருவர் அவரை சந்திக்க வரப்போவதாகவும் அவரை எனக்கும் என் சக அதிகாரி ஒருவருக்கும் அறிமுகம் செய்துவைப்பதாகவும் சொன்னார். அப்படியானால் வரப்போகும் நபர் ஏதோவொரு வகையில் சிறப்பானவர் என்பது புரிந்தது. அவரே தொடர்ந்து சொன்னார் வரப்போகும் நபர் ஒரு மாயாஜாலக்காரர் என்று.

நண்பரும் அலுவலக நேரம் முடிந்து ஒரு சில நிமிடங்களில் வந்தார். அவருடன் அவர் உதவியாளரும் வந்திருந்தார். வந்த அந்த நண்பரின் பெயர் ஷங்கர். அவர் வயது எப்படியும் 70க்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பரஸ்பர அறிமுகம் செய்துவைத்த சக அதிகாரி, எங்களுக்காக சில மாயாஜாலங்கள் செய்து காட்டுமாறு வேண்ட, அவர் ஒரு காகிதத் துண்டு தருமாறு கேட்டார்.

அவர் செய்த முதல் தந்திரம் அந்த சிறு துண்டு காகிதத்தை நன்றாக கசக்கி மீண்டும் அதை பிரித்தார். எங்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. பிரித்ததும் அது ஒரு இரனடாயிரம் ருபாய் தாளாக அவர் கைகளில் விரிந்தது. இது மீண்டும் அந்த காகித துண்டாக மாறிவிடும் என்று சொல்லி அதை மடித்து கோட் ஜோபியில் போட்டுக் கொண்டார்.


அடுத்ததாக இரண்டு நாணயங்களை கையில் எடுத்துக்கொண்டு அவற்றை சட்டை ஜோபியில் போட்டு கையிலிருந்து எடுத்தல், வேறு கைக்கு மாற்றி ஜோபியிலிருந்து எடுத்தல் என்று வேறு வேறு விதமாய் மாற்றி மாற்றி மறைத்து எடுத்து காட்டினார்.

அடுத்ததாக என் கையை நீட்டச்சொல்லி என் கையை அவர் கையால் தடவினார். உடனே என் கையில் ஒரு பாதாம் பருப்பு இருந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட அந்த ஆச்சர்ய உணர்வை வார்த்தைகளால் சொல்வது கடினம்.

கடைசியாக அவர் முன்பு ஜோபியில் போட்ட அந்த இரண்டாயிரம் ருபாய் தாள் காகித துண்டாக மாறிவிட்டதா பார்க்கலாம் என்று சொல்லி அதை வெளியே எடுத்தார். பார்த்தல் அது அப்படியே மடித்த நிலையிலேயே இருந்தது. அதை அவர் பிரிக்க அது அப்படியே பல நூறு ருபாய் தாள்களாக மாறியது. கண் முன் நடந்த அந்த அதிசயத்தை கண்டு ஸ்தம்பித்துப் போனோம்.

அவர் வேறோர் இடம் செல்லவேண்டி இருந்ததால், அத்துடன் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே அவருக்கு மாயாஜாலத்தில் விருப்பம் அதிகமாம். பின்னர் அவர் பி.சி.சர்க்கார் சீனியர் உடன் 5 ஆண்டுகள் பணிபுரிந்து மாயாஜாலம் கற்றாராம். உலகில் பல நாடுகளில் அவர் மாயஜால நிகழ்சிகள் நடத்தியுள்ளாராம். அவருடைய நிகழ்சிகளின் வீடியோக்களை யூ-ட்யூபில் காண Jadugar Samrat Shankar என்று தேடவும்.

அது எல்லாமே கண் கட்டு வித்தை என்று தெரிந்தாலும் அதை ஆகில் இருந்து பார்க்கும்போது ஏற்படும் ஆச்சரிய உணர்வை தவிர்க்க முடியவில்லை. மேலும் அருகில் இருந்து பார்த்தாலும் அந்த தந்திரங்களின் இரகசியத்தை கவனிக்க முடியாதபடி அவர் செய்தார்.

இதுவரை பார்த்த மாயாஜால காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது மேடை மீது நடப்பதை தூரத்தில் கீழே உட்கார்ந்து பார்த்ததோதான். அவர் பக்கத்தில் அமர்ந்து கண்ணுக்கு அருகில் 2 அடி தூரத்தில் நடந்த அந்த மாயாஜாலங்களை பார்த்தது ஒரு சிலிர்ப்பான மறக்கமுடியாத அனுபவம்தான். இன்னொரு கூடுதல் சந்தோஷம் அவர் எங்கள் இருவருக்காக மட்டும் பிரத்யேகமாக அவற்றை செய்தது காண்பித்ததுதான்.

2 comments:

  1. கண்கட்டு வித்தை என்பதே எப்படி என்பது ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
  2. உண்மைதான். பக்கத்திலேயே உட்கார்ந்து பார்த்தும் அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete