Monday, July 02, 2018

மனமகிழ் பயணம் - 2

பகுதி 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்.


மதியம் சுமார் இரண்டு மணிக்கு விடுதியை சென்றடைந்தோம். அந்த விடுதி குவஹாடி ரயில் நிலைய சாலையில் அமைந்திருந்தது. எல்லாருக்கும் பசி. ஏற்கனவே ஒருமணி நேரம் வெயிலில் பயணித்து வந்திருந்ததால் மீண்டும் வெளியில் எங்கும் சென்று சாப்பிட யாரும் விரும்பவில்லை. விடுதியிலேயே உணவகம் உண்டென்றாலும் அங்கே அசைவமும் உண்டு என்பதால் கொண்டு வந்திருந்த நொறுக்கு தீனிகளில் சிலவற்றை உண்டு ஓய்வெடுத்தோம். 

அதற்குள் சுற்றிப்பார்க்க இடங்கள் ஏதாவது அருகில் இருக்கின்றனவா என்று நான் கூகுள் மேப்ஸ்-ல் தேடினேன். அரசு அருங்காட்சியகம் அருகில் இருப்பதாக அது காட்டியது. சுமார் நான்கு மணிக்கு புறப்பட்டோம். விடுதியின் வரவேற்பில் விசாரித்ததில் நடந்து செல்லும் தூரத்தில்தான் அருங்காட்சியகம் உள்ளது என்று சொன்னார்கள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அங்கே இருந்தோம்.
 
அருங்காட்சியக கட்டடம்
அருங்காட்சியகம் அந்த கட்டடத்தின் 3 தளங்களில் அமைந்துள்ளது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.5/- சிறுவர்களுக்கு ரூ.2/-. உள்ளே சென்றதும் முதலில் அவர்கள் முதல் தளத்திற்கு செல்லுமாறு வழிகாட்டினார்கள். அங்கே ஒரு அறையில்  அஸ்ஸாமிய ஓவியர்கள் தீட்டிய ஓவியங்களும், மற்றொரு அறையில் அஸ்ஸாமிய தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பல அறிய புகைப்படங்கள் மற்றும் அவர்கள் எழுதிய கடிதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் ஒன்று, மகாத்மா காந்திஜி தமிழில் எழுதிய கடிததின் ஒரு பகுதி. அதில் அவர் “நீரில் எழுத்தொக்கும் யாக்கை” என்று எழுதி ம.க.காந்தி என்று கையொப்பமிட்டுள்ளார். அதை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தது அங்கிருந்து இரண்டாம் தளத்திற்கு சென்றோம். அங்கே அஸ்ஸாமிய கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை காட்சிப்படுத்தும் விதமாக உடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கைவினைப்பொருட்கள், இசைக் கருவிகள், இன்னபிற என பல பொருட்களும், அவர்களின் ஒரு கிராமத்து வீட்டின் மாதிரியும் வைத்திருந்தார்கள்.நடராஜர், துர்க்கை மற்றும் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட சிவன் உருவம்.

இறுதியாக தரை தளத்திற்கு வந்தோம். அங்கே அம்மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பல பழைய கற்சிலைகளை ஒரு கூடத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் பல பழைய நடராஜர் சிலைகள் இருந்தன. நடராஜர் தமிழ்நாட்டில் மட்டுமே பூஜிக்கப்படும் சிவனின் ரூபம் என்ற பொதுக்கருத்தை பொய்யக்குவதாக அது இருந்தது. மற்றொரு அறையில் அவர்களின் அரசர் காலத்து நாணயங்களை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அருங்காட்சியகத்தின் எல்லா அரங்குகளிலும் வெளிச்சம் குறைவான விளக்குகளே வைத்துள்ளனர். உள்ளே எடுக்கப்படும் படங்கள் பிளாஷ் உபயோகிக்காமல் எடுக்கப்படவேண்டும் என்று அறிவிப்பு வைத்திருக்கிறார்கள். அதனால் அங்கே படம் எடுக்க நாட்டம் இல்லாமல் இருந்தது. எடுக்கப்பட சில படங்களும் பளிச்சென்று இல்லை. எல்லாம் பார்த்து முடித்து நாங்கள் வெளியே வருவதற்கும் அருங்காட்சியகம் மூடப்படுவதற்கும் சரியாக இருந்தது.மாலை ஆறு மணி. அடுத்தது எங்கே செல்லலாம் என யோசித்துக்கொண்டு இருக்கையில், அருங்காட்சியககத்திற்கு எதிரிலேயே எரியோடு ஒட்டிய ஒரு சிறிய பூங்கா இருந்தது. அந்த ஏரியின் பெயர் திகாலிபுகுரி. இங்கும் நுழைவுக்கட்டணம் உண்டு. பெரியவர்களுக்கு ரூ.10/-, சிறுவர்களுக்கு ரூ.5/-.

டயர்களின் இடுக்குகளில் வளர்க்கப்படும் செடிகள் 

மூங்கில் குழல்களில் வளர்க்கப்படும் செடிகள் 


ஏரியை சுற்றி நடை பாதையும் முன்புறம் சிறுவர் விளையாட்டு திடலும் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்றபோது சில சிறுமிகள் துடுப்புப் படகு செலுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஏரியின் பின்புறம் ராணுவ வீரர்களுக்கான ஒரு நினைவிடமும் சில போர் விமான மாதிரிகளும் வைக்கப்பட்டிருந்தன. அரைமணி நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு விடுதி வந்து சேர்ந்தோம்.

இரவு உணவுக்கு எங்கு செல்வது என சைவ உணவகங்களை கூகுள் மேப்ஸ்-ல் தேடி ரயில் நிலையத்திற்கு மறுபுறம் இருக்கும் ஒரு உணவகத்தை தேர்ந்தெடுத்து அங்கு சென்றோம். மயூர் ஹோட்டல் எனும் விடுதியின் உணவகம் அது. செல்லும் வழியெங்கும் சாலையில் மக்கள் பான் மென்று துப்பி வைத்திருக்கிறார்கள். சாலையில் நடப்பதற்கே அருவெறுப்பாக இருந்தது.

ரயில் நிலையத்தை நடை மேம்பாலத்தில் கடந்து மறுபுறம் இறங்கினால் அது பிரதான அங்காடிப் பகுதி. அதன் பெயர் பல்டன் பஜார். எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டமும் வாகன கூட்டமும் ஒன்றை ஒன்று முன்டியடிதுக்கொண்டிருந்தன. ஒருவழியாக அந்த உணவகத்தை தேடி கண்டுபிடித்து சென்றோம். அந்த உணவகத்தில் டெபிட் கிரெடிட் கார்டுகளை ஏற்பதில்லையாம். சாப்பிட்டவுடன் மேற்பார்வையாளர் ஒருவர் வந்து எவ்வளவு ஆனது என்று சொல்லி பணம் கேட்டார். பில் கேட்டர்தர்க்கு இதோ கொண்டுவருகிறேன் என்று பணத்துடன் சென்றவர் கவுன்ட்டர் அருகில் எங்கேயோ வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருண்தார். அவர் பில் பற்றி ஏதும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அதற்குமேல் அங்கு காத்திருப்பது வீண் என்று கிளம்பிவிட்டோம். எங்கள் பயணத்தின் முதல் நாள் நல்லபடியாக முடிந்தது.

பயணம் தொடரும்...


2 comments:

 1. அருமை...
  நானும் யாத்திரிகனே..
  என் கதை https://chikkubukkurayilu.blogspot.com/2018/06/26-25-2015.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Travelcheese.

   Delete