Wednesday, July 11, 2018

அப்பாவியின் அனுபவம் - 2

அரசுப்பணி கிடைத்தவுடன் நான் முதன்முதலாக பணியமர்த்தப்பட்ட இடமானது பத்து நிமிட நடையில் விமான நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம், பன்னாட்டு நிறுவனங்கள், உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள், மால்கள், 1000 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 50 மீட்டர் தூரம், சென்னைக்கு மிக மிக அருகில் மற்றும் இத்யாதிகள் என்று எந்த அடைமொழிகளும் இல்லாத, ரயில் மற்றும் பேருந்து நிலையம் மட்டுமே உள்ள சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊராகும்.


உலக வழக்கப்படி மற்ற எல்லோரையும் போல நானும் என் மூத்த சகாக்களின் அறிவுரைப்படி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சென்னைக்கு இடமாற்றம் கோரி விண்ணப்பம் எழுதிக் கொடுத்தேன். முதல் நாளே துண்டு போட்டு இடம் பிடிக்கக் காரணம் விண்ணப்பித்த தேதியின் அடிப்படையில்தான் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு பணியிட மாறுதல் கிடைக்கும்.


இடமாற்றம் கிடைக்க எப்படியும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த அப்பாவி, தினமும்  மாங்கு மாங்கென்று சென்னையிலிருந்து வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தேன்.வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் கழித்து ஒருநாள் கண்காணிப்பாளர் எங்கள் அலுவலகத்திற்கு ஆய்வுக்காக வந்திருந்தார். அவர் தன் பணி முடிந்தவுடன் நாங்கள் பணி செய்துகொண்டிருந்த பகுதிக்கு வந்து இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அவர்களை பார்த்தபடி மெதுவாக நடக்கும் அந்நிய நாட்டு தலைவர் போல எங்களை எல்லாம் பார்த்தபடி நிதானமாக நடந்தார்.


என் அருகில் வந்ததும்,

"நீங்க சென்னைக்காரரா?" என்றார்.

"ஆமாம் சார்"

"நீங்க டிரான்ஸ்பர் ரிக்வெஸ்ட் தந்திருக்கீங்களா?"

"ஆமாம் சார்.  கொடுத்திருக்கேன்"

"சென்னையிலிருந்து தினமும் வந்துட்டு போரீங்களா?

"ஆமாம் சார்"

அவருக்கு அறிமுகம் இல்லாத என்னிடம் இவ்வாறு நேரடியாக மாறுதல் பற்றி பேசியதும் மிதமான வெயிலும் சில்லென்ற தூரலும் கலந்து பிரசவித்த வானவில்லை பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்தை உணர்ந்தேன். ஆஹா! மிக அக்கறையாக விசாரிக்கிறாரே. மற்றவர்கள் சொன்னதுபோல் ஆண்டுகள் கணக்கில் காத்திருக்கவேண்டியதில்லை போலும். ஏதாவது ஏற்பாடு செய்து நமக்கு உடனே மாற்றல் தருவார் போலிருக்கிறது என்று தோன்றியது.

காரணம், அந்த கால கட்டத்தில்தான் சென்னையில் இருந்த எங்கள் துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டரை பெரிய அளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்கள். சீனியர்கள் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் நாட்டமும் அனுபவமும் இல்லாததால் என்னைப்போன்ற இளைஞர்களை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அதைப்போன்ற கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட எதாவது வேலைக்காக என்னை அழைப்பர்களோ என்ற எண்ணம் எழுந்தது.

தனி அறையில்  ஹீரோ ஹீரோயினை நெருங்கும்போது தடங்கலாக தட் தட் தட்னு யாராவது கதவு தட்டுவாங்களே, அதைப்போல என் எண்ணங்களுக்கு தடங்கலாக ஏதோ ஒரு கேள்வி  கேட்கப்பட்டது காதில் விழுந்தது. முதலில் அது சரியாக புரியவில்லை. பிறகுதான் ஊசியிலிருந்து மருந்து மெதுவாக உடம்புக்குள் இறங்குவதுபோல் என்ன கேட்கப்பட்டது என்பது மண்டைக்குள் இறங்கியது.

கேட்டது அந்த அதிகாரிதான். கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.

"நீங்க தினமும் சென்னையிலிருந்து வந்து போறீங்களே, அதுக்கு துறையிலிருந்து அனுமதி வாங்கியிருக்கீங்களா?"

கேட்கப்பட்டது முழுவதும் மண்டைக்குள் இறங்கியவுடன் நான் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றேன். காரணம் அப்படி எந்த அனுமதியும் நான் பெறாததுதான். அதனால் ஏதாவது வில்லங்கம் வந்துவிடுமோ என்று வேறு பயம் கவ்விக்கொண்டது.

கமரக்கட்டு கிடைக்கும் என்று ஆசையாய் காத்திருக்கும்போது கண்களை கட்டி கடத்திச்சசெல்லப்பட்ட குழந்தையின் நிலை போல இருந்தது அப்போதைய என் நிலை. என் இடத்தில் வடிவேலு இருந்திருந்தால், "ஆட்டோல ஏத்தி விட்டாங்க. வீட்டுக்குத்தான் அனுப்புராங்கானு நம்பி ஏறினா அது நேரா ஒரு மூத்தர சந்துக்குள்ள போய் விட்டுச்சி" என்று கிரி பட வசனத்தை பேசியிருப்பார்.

அரசு ஊழியர் அவர் பணியமர்த்தப்பட்ட ஊரில்தான் குடியிருக்க வேண்டும் என்பது அரசுப்பணி விதி. அப்படி ஒருவேளை அவர் வேறு ஊரில் வசிக்க நேர்ந்தால் அதற்கு துறையிடம் அனுமதி வாங்கவேண்டும். வேலைக்கு சேர்ந்த புதிது என்பதால் பச்சப்புள்ளயா இருந்த எனக்கு அது தெரியாமல் போனது  என் தலைவிதி.

திடீர் பயத்தில் வறண்டுபோன வாயால் "இல்ல சார்" என்று சொல்லும்போது வார்த்தைகளுக்கு பதிலாக வெறும் காற்றுதான் வந்தது என்று நினைக்கிறேன். நான் சொன்னது அவர் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது.

கூட்டமான பேருந்தில் காலியாகும் ஒரு இருக்கையை எங்கோ நிற்கும் ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு போய் பிடித்தவுடன் பெருமை பொங்கும் முகத்துடன் மற்றவர்களை ஒரு லுக்கு விடுவாரே அப்படிப்பட்ட ஒரு பெருமிதப் பார்வையை என் மீது வீசி மேலும் எதுவும் கேட்காமல் நடையை கட்டினார் கண்காணிப்பாளர்.

நல்லா கெளப்பராங்கைய்யா பீதிய!

2 comments:

 1. வணக்கம், திரு மகேஷ்.
  அப்பாவியின் அனுபவம் - 2 படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. எழுத்து நல்ல நடையுடன் அமைந்துள்ளது. ஒரே ஒரு விஷயம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் உவமை கொடுப்பது தேவையில்லை. அது நீங்கள் சொல்ல வரும் விஷயத்தின் சுவாரஸ்யத்தைக் கெடுக்கிறது. உதாரணத்திற்கு கடைசி இரண்டு பாராக்கள்: //திடீர் பயத்தில் வறண்டுபோன வாயால் "இல்ல சார்" என்று சொல்லும்போது வார்த்தைகளுக்கு பதிலாக வெறும் காற்றுதான் வந்தது என்று நினைக்கிறேன். நான் சொன்னது அவர் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது.

  கூட்டமான பேருந்தில் காலியாகும் ஒரு இருக்கையை எங்கோ நிற்கும் ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு போய் பிடித்தவுடன் பெருமை பொங்கும் முகத்துடன் மற்றவர்களை ஒரு லுக்கு விடுவாரே அப்படிப்பட்ட ஒரு பெருமிதப் பார்வையை என் மீது வீசி மேலும் எதுவும் கேட்காமல் நடையை கட்டினார் கண்காணிப்பாளர்.

  உங்களின் நிலை என்னாவாயிருக்கும் என்று வாசகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது எதற்காக பேருந்தி போகும் ஒருவரைப் பற்றிச் சொல்ல வருகிறார் என்று குழப்பம் வருகிறது. தயவு செய்து இதுபோல உவமைகள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். //என்னை பயமுறுத்திய பெருமிதத்துடன் ஒரு பார்வையை என் மீது வீசிவிட்டு நடையைக் கட்டினார்// என்று எழுதியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னொன்று நீங்கள் இப்படிச் செய்யும் போது அந்த வாக்கியம் நீண்டதாகி விடுகிறது.
  இது எனது தாழ்மையான கருத்து. சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நினைக்கிறேன்.
  தொடர்ந்து எழுத்துங்கள், நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் என் தளத்திற்கு வருகை தந்தததில் மகிழ்ச்சி. எழுத்து/பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் அறிவுரைக்கும் வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றி ரஞ்சனி அம்மா. உங்கள் அறிவுரைப்படி தேவையற்ற உவமைகளை தவிர்த்து எழுத முயற்சிக்கிறேன். உங்கள் வருகையும் வழிகாட்டுதல்களும் தொடர வேண்டுகிறேன்.

   Delete