Thursday, August 09, 2018

வடக்கும் தெற்கும்

சில நாட்களுக்கு முன் சக அதிகரி ஒருவரின் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. அவர் பாலக்காட்டு தமிழர். எங்கள் அலுவலகத்தின் அருகில் இருக்கும் அரசு குடியிருப்பில்தான் வசிக்கிறார். அன்று வேலை நாள் என்பதால் எங்களை மதிய உணவிற்கு அழைத்திருந்தார். நாங்களும் சென்றிருந்தோம். 

தினமும் எங்கள் விருந்தினர் இல்ல சாப்பாட்டை சாப்பிட்டு வெறுத்துப் போயிருந்த நாக்கிற்கு நல்ல தரமான சுவையான விருந்து கிடைத்தது. ஜாங்கிரி, பால் பாயசம், புளியோதரை, அவியல், சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு கார கறி, பீன்ஸ் கறி, அப்பளம், தயிர் பச்சடி  என அருமையான விருந்து. பரிமாறியவர் ஒரு நேபாளி. நண்பரிடம் சமையல் காண்ட்ராக்ட்டர் யார் என்று விசாரித்தேன்.

அவர் கும்பகோணத்தை சேர்ந்தவராம். முப்பது வருடங்களாக தில்லியில் வசிக்கிறாராம். ஆனால் விழா சமயத்தில் அவர் தில்லியில் இல்லையாம். சமைத்தது அவருடைய நேபாளி உதவியாளர்கள் தானாம். அதை கேட்டதும் அசந்துபோனேன். காரணம், உணவு அச்சு அசல் நம்ம ஊர் கைமணத்தில் இருந்தது. நம்ம  ஊர் சமையலை கற்று அவ்வளவு அருமையாக சமைத்த அந்த நேபாளி சமையல்காரரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

================================================================================================================

இளம் விற்பனை பிரதிநிதி ஒருவர் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தார். தன் நிறுவன தயாரிப்புகள் பற்றி  விலாவாரியாக என்னிடம் சொல்லிகொண்டிருந்தார். வேலை அதிகம் இருந்ததால், தேவைப்படும்போது அவர்களை அணுகுவதாக சொல்லி அவரை கழற்றிவிட முயற்சித்தேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை.

நீங்கள் தென்னிந்தியரா என்றார். ஆமாம் என்றதும் சமீபத்தில் திறக்கப்பட்ட கே.ஆர்.எஸ்., கபினி, மேட்டூர் அணைகளை மிஞ்சும் அளவிற்கு அவர் பேச்சு பிரவாகமாய் பாயத் தொடங்கியது.

அந்த இளைஞர் பீகார்காரராம். கடந்த ஆண்டு எம்.பீ.ஏ. முடித்து சில மாதங்களுக்கு முன்தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறாராம். அவர் எம்.பீ.ஏ. படித்தது பெங்களுருவிலாம். தென்னகத்து மனிதர்கள், உணவு, வசதிகள், சுத்தம் எல்லாம் அவரை மிகவும் கவர்ந்துவிட்டனவாம். தென்னாட்டிலேயே வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினாராம். அதற்கேற்ப கேம்பஸ் செலக்ஷன்-ல் வேலையும் கிடைத்ததாம். 

ஆனால் பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் மதிப்பெண் பட்டியலை குறிப்பிட்ட காலத்திற்குள் தராததால் அவரால் அந்த வேலையில் சேர முடியவில்லையாம். வேறு வழியில்லாமல் தில்லி வந்து வேலைக்கு சேர நேர்ந்ததாக சொன்னார். அவருக்கு வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தேன்.

6 comments:

 1. பொதுவாக தெற்கும், வடக்கும் இணைவதில்லை.

  இங்கு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. இங்கு என் அனுபவத்தில் இதுவரை யாரும் தென்னிதியர்களை பற்றி தவறாக பேசியதில்லை. எல்லாருமே தென்னகத்தைப் பற்றியும் தென்னிதியார்களை பற்றியும் சிலாகித்தே பேசுகிறார்கள்.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

   Delete
 2. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வது போல சமையலும் கைப்பழக்கம் என்று சொல்லி விடலாம் போல..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நீங்கள் சொல்வது சரியே. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அந்த நேபாளி ரொம்பவே சிறப்பாக ஜாங்கிரி சுற்றுவார். பல முறை அவருடைய சமையல் ருசித்திருக்கிறேன். அந்த கும்பகோணம் சமையல் கலைஞர் பெயர் அய்யப்பன் - எங்கள் பகுதியில் நடந்த ஒரு விழாவில் “அறுசுவை அரசன்” என்ற பட்டம் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம். அவர் பெயர் ஐயப்பன் என்றுதான் நண்பரும் சொன்னார். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்கட்.

   Delete