Friday, January 12, 2018

எழுமின், விழிமின், ஓயாது உழைமின்.
இன்று சுவாமி விவேகனந்தரின் பிறந்த நாள். நம் நாட்டில் இந்நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனால் அவரிப்பற்றிய என் எண்ணங்களை இன்று பதிவேற்றுகிறேன்.

அவருடைய பிறப்பு வளர்ப்பு பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இல்லாவிட்டாலும் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள புத்தகங்களும் இணைய தளங்களும் உள்ளன. அதனால் அந்த தகவல்களை நான் இங்கு தரவில்லை.

அவர் மட்டும் பிறக்கவில்லை என்றால் நம் பாரத தேசத்தின் ஆன்மீக பெருமை உலகத்திற்கும், ஏன் நம் நட்டு மக்களுக்குமே கூட தெரியாமல் போயிருக்கும். அவர் கலந்துகொண்ட சிகாகோ மாநாடு நம் தேசத்தைப் பற்றி மேற்கத்திய நாடுகள் கொண்டிருந்த பார்வையை புரட்டிப் போட்டது. பாரத தேசம் என்றாலே சன்யாசிகளும் பாம்பாட்டிகளும் இருக்கும் நாடு என்ற என்னத்தை மாற்றி நமது பொக்கிஷமான உயர்ந்த ஆன்மீக தத்துவங்களை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றவர்.

தேச சேவைக்காக துறவறம் பூண்டு சன்யாசி ஆனார். ஆனாலும் ஆஷ்ரமத்தில் இருந்துகொண்டு மக்களை தன்னைத்தேடி வரவைக்கும்  மற்ற சன்யாசிகளைப் போல அல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் மக்களை நோக்கி சென்றார். அவருடைய எல்லா சிறப்பம்சங்களிலும் இதுவே தலையாயது என்று நினைக்கிறேன்.

கிட்டதிட்ட ஆயிரம் ஆண்டு காலமாக நம் பாரம்பரியத்திற்கும் கலாசாரத்திற்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் நம்மை ஆண்டு வந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட மனச்சோர்வையும் நம் பாரம்பரியம், பெருமைகள் மற்றும் பலங்கள் பற்றிய மறதியையும் களைய முயற்சி மேற்கொண்ட ஒரே மனிதர் அவர்தான் என்றால் அது மிகை ஆகாது.

பாரத தேசத்தின் பலம் அதன் ஆன்மீக தத்துவங்களில் உள்ளது என்பதை மக்களுக்கு நினைவூடியவர். அந்த ஆன்மீக தத்துவங்களை மீண்டும் நம் வாழ்க்கையோடு இணைத்துக்கொள்வதன் மூலம் தான் நாம் புத்துணர்வு பெற்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுவித்துகொள்ள முடியும் என்று வழி காட்டியவர்.

மற்ற ஆன்மீகவாதிகள் எல்லாம் கடவுளை அடைய பூஜை புனஸ்காரம், மனத்தூய்மை, பக்தி, பற்றின்மை ஆகியவற்றை உபதேசித்துக்கொண்டிருக்க, இவரோ கர்ம யோகமே கடவுளை அடையும் வழி என்று உரக்கச் சொன்னவர். அவ்வழியே வாழ்ந்தும் காட்டியவர். கர்ம யோகம் என்பது அவரவர்க்கான கடமையை செவ்வனே செய்வது என்பதே. பகவத்கீதை சொல்வதுபோல் கடமையை செய், பலன் தானாகவெ தொடரும் என்பதுதான் ஆது.

ஒரு இயந்திரத்தின் பாகங்கள் தத்தம் வேலையை  சரியாகச் செய்தால், அந்த ஒட்டுமொத்த இயந்திரம் ஒழுங்காக இயங்கி அதன் வெளியீடு என்னவோ அதை கச்சிதமாக தரும். இதைத்தான் அவர் மக்களுக்கு புரியவைக்க முயற்சித்தார். எல்லாரும் அவரவர் கடமையை சரியாகச் செய்தால் அதன் தாக்கம் இந்த சமுதாயத்தில், மாநிலத்தில், நாட்டில் நடக்கவேண்டிய விஷயங்களை அதுவாகவே நிகழ்த்திக்காட்டும். ஆனால் இதுவரை மக்கள் இந்த விஷயத்தை புரிந்துகொண்டதாக தெரியவில்லை.

அவருடைய இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒரு உண்மையான சன்யாசியாக, எந்த ஒரு ஊரிலும் நிரந்தரமாக தங்கியிராமல் நாடு முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தார். மக்களோடு மக்களாக கலந்து பழகினார். அவர்களுக்கு உடல் பலத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறினார். ஒரு பலம்பொருந்திய உடலில்தான் பலம்கொண்ட மனம் இருக்கும், அதுதான் தன்னம்பிக்கை தந்து எல்லா தடைகளையும் மீறி தன்  கடமைகளை செய்யவைக்கும் என்று நினைவூடியவர். அவரைப்போல் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவர் வேறு யாரும் இருந்ததாக தெரியவில்லை.

ஒவ்வருவரும் தம் அளவில் அவரின் ஒருசில வழிகாட்டுதல்களை பின்பற்றினாலும் விரைவில் நம் தேசத்தில் ஒரு நல்ல மாற்றம் வரும் என்பது உறுதி.

அவரின் ஒருசில பொன்மொழிகள் உங்களுக்காக:

 • எழுமின், விழிமின், ஓயாது உழைமின்.
 • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
 • உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
 • நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
 • பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
 • கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
 • உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
 • அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
 • மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
 • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
 • நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
 • அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
 • உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
 • உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

4 comments:

 1. அருமையான கட்டுரை நண்பரே பகிர்வுக்கு நன்றி - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 2. நல்லதொரு கட்டுரை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

   Delete