Wednesday, January 24, 2018

இரவு... இளம்பெண்... 2 நிமிடங்கள்

அந்த சாலை ரயில்நிலையத்திற்கு நேர் எதிரே அரை கிலோமீட்டர் தூரம் சென்று பிரதான சாலையை தொடும். சாலையில் ரயில் நிலையத்தின் அருகிலும், பின்பு பாதி சாலைத் தாண்டி ஒரு இடத்திலும், அதன் பிறகு பிரதான சாலையை தொடும் இடத்திலும் மட்டுமே சாலை விளக்குகள் இருக்கும். சாலையின் மற்ற பகுதிகளில் தினமும் அமாவாசைதான்.

ரயில் நிலையத்திலிருந்து சாலையின் பாதி தூரத்திற்கு மேல் வரை இருபுறமும் புதர் மண்டிக்கிடக்கும் காலி மனைகள்.

இரவு சுமார் எட்டரை மணி இருக்கும். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். அந்நேரம் சாலை வெறிச்சோடி இருக்கும். அந்த நிலையத்தில் இறங்குபவர்கள் மிகவும் குறைவு. அதிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் வாகனங்களிலோ அல்லது ரிக்ஷாக்களிலோ சென்றுவிடுவார்கள். நடந்து செல்வபவர்கள் ஒன்றிரண்டு பேர்தான்.

முதல் வெளிச்சப்பகுதியை தாண்டி இருளில் நடந்துகொண்டிருந்தேன். திடீரென்று பின்னல் யாரோ அவசர அவசரமாக நடந்து வரும் செருப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு இளம்பெண். நான் என் நடையை தொடர, அவள் இன்னும் வேகமாக என்னை நோக்கி நடப்பது அவள் காலனிகளின் சத்தம் மூலம் தெரிந்தது.

இருளில் தனியாக நடக்க பயப்படுகிறாள் போலும்,அதனால்தான் என் பின்னாலேயே வருகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ இடைவெளியை குறைத்துக்கொண்டே வந்து எனக்கு பக்கவாட்டில் நடக்க ஆரம்பித்தாள். அவள் பக்கத்தில் ஏன் நடக்கவேண்டும் என்று நினைத்து நான் வேகத்தை கூட்டினேன். அவளும் வேகத்தைக் கூட்டி எனக்கு குறுக்காக நடக்க ஆரம்பித்தாள். 

சரி, அவள் முன்னே போகட்டும் என்று நான் மெதுவாக நடந்தால், அவளும் வேகத்தை குறைத்து என்னுடனேயே நடக்கலானாள். என்னடா இது வம்பாக போய்விட்டது என்று மறுபடியும் வேகமாக நடந்தால் திரும்பவும் அவள் என்னைத் தாண்டி குறுக்கே நடந்தாள். இப்படியே அவள் என்னோடு ஓடிப் பிடித்து ஆட்டம் கட்டிக்கொண்டு இருந்தாள்.

வடிவேலு காமெடியில் வருவதுபோல் திடீரென்று என்னிடம் நாம மலை உச்சியிலிருந்து குதிச்சி குதிச்சி விளையாடலாமா என கேட்பாளோ என்று தோன்றியது. அனால் அங்கேதான் மலை எதுவும் இல்லையே. அதற்கு பதில் அங்கே உள்ள கட்டடங்கள் எல்லாமே மிக உயரமானவை. மலைக்கு பதில் கட்டடத்தில் ஏறி குதிக்கலாம் என்பாளோ என்ற எண்ணமும் கூடவே வந்தது.

இப்போது எனக்கு லேசாக பயம் வந்தது. இவள் கொள்ளைக்காரியாக இருப்பாளோ என்ற சந்தேகம் தோன்றியது.  ஆள் அரவமற்ற அந்த பகுதியில் அவள் கத்தியோ துப்பகியோ காட்டி மிரட்டி கையில் இருப்பவற்றை பரித்துக்கொண்டால் என்ன செய்வது. 

அந்நேரம் என்னிடம் பெரிதாக ஒன்றும் இல்லை. அதனால் பயம் இன்னும் அதிகமானது. மீண்டும்  வடிவேலு காமெடி போல என்னிடம் ஒன்றும் தேறவில்லை என்ற கடுப்பில் என்னை தாக்கிவிட்டு சென்றால் என்ன செய்வது என்று அந்த  சில நொடிகளில் மனம் தாறுமாறாக யோசிக்கத் தொடங்கியது.

தில்லியில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் உள்ளது. ஆண்களுக்கும்  அதே நிலைதானா என்று சத்தம்போட்டு கத்தினேன் என் மனதுக்குள்ளேயே. 

அதற்குள் அந்த அடுத்த தெருவிளக்கு வந்தது. அவள்  எனது வலப் பக்கத்திலிருந்து இடது பக்கம் விருட்டென்று ஓடி சாலையை கடந்து எதிரே இருந்த ஒரு பெரிய குடியிருப்புக்குள் நுழைந்தாள். அப்போதுதான் என் மனம் அமைதியானது. 

அவள், அந்த 2 நிமிட நேரத்தில்  எனக்கு ஒரு மௌன திகில் நாடகத்தை நடத்திக் காட்டிவிட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

4 comments:

  1. இருந்தாலும் நீங்க இம்பூட்டு பயம் பயப்படலாமா ?

    ReplyDelete
    Replies
    1. அந்த சூழ்நிலையில் அப்பெண் நடந்துகொண்ட விதம் சற்று வித்தியாசமாக இருந்ததால் லேசான பயம். அந்த உணர்வை பயம் என்பதைவிட ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்ற குழப்பம் என்று சொல்லலாம்.

      Delete
  2. தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு அத்தனை இல்லை. தனியாகச் செல்ல பயம் இருந்திருக்கலாம்....

    ஆண்கள் கூட தில்லியில் தனியே நடப்பது பல சமயங்களில் சரியானதல்ல....

    ReplyDelete
  3. //தனியாகச் செல்ல பயம் இருந்திருக்கலாம்.... //
    அந்த பெண் வேகமாக என்ன அருகில் வரும்போதே எனக்கு காரணம் புரிந்தது. ஆனால் அதற்குப் பின் அவள் எனக்கு குறுக்கும் மறுக்கும் நடந்ததுதான் குழப்பம் தந்தது.

    வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் நன்றி.

    ReplyDelete