Saturday, March 10, 2018

பத்மாவத் - என் பார்வையில்


சில நாட்களுக்கு முன் பத்மவத் படம் 3டி-ல் பார்த்தேன். இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் மாலிக் முஹம்மது ஜாயசி என்பவர் எழுதிய பத்மாவதி என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்பதால் படத்தை பற்றிய என எண்ணங்களை மட்டும் இங்கு பதிவிடுகிறேன்.

படத்தின் ஆரம்பமே அலாவுதீன் கில்ஜியின் அதீத முரட்டு குணத்தை காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. படைத்தலைவனான அலாவுதீன் சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியின் மகள் நெருப்புக்கோழியின் இறகை கேட்டாள் என்பதற்காக ஒரு நெருப்புக்கோழியையே பிடித்துக்கொண்டு வந்து தருகிறான். அதற்கு பரிசாக அவளையே மணக்கிறான்.


அவன் ஒரு போரில் வென்று கைப்பற்றும் ஒரு மிகச்சிறந்த ரத்தினத்தை ஜலாலுதீன் பறித்துக்கொன்டதும், மாமனார் என்றும் பாராமல் அவனை கொன்று தான் சுல்தான் ஆவது அவன் எதையும் செய்தத் தயங்காதவன் என்பதை காட்டுகிறது. மிகச்சிறந்தவை எல்லாம் தனதாக இருக்கவேண்டும் என்பதே அவன் பேரவா.

படம் முழுக்க வியாபித்து இருப்பது அலாவுதீன் கில்ஜிதான். பத்மாவதியும் அவள் கணவன் ரதன் சிங்கும் துணை கதாபத்திரங்களாகவே தோன்றுகிறது. பத்மாவத் என்பதற்கு பதிலாக அலாவுதீனின் தோல்வி என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தால் பொருத்தமாகவும் சர்ச்சைகளெல்லாம் இல்லாமலும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பாஹுபலி-2-வில் இளவரசி தேவசேன அறிமுகம் ஆகும் காட்சியை ஒப்பிட்டால் இளவரசி பத்மாவதியின் அறிமுக காட்சி சாதாரணமாகவே தோன்றுகிறது. அடிபட்ட ரதன் சிங் காயம் குணமாகி நாடு திரும்புவதாக சொல்லும்போது பத்மாவதி அவன் மார்பில் கத்தியால் கீரிவிட்டு உனக்கு இன்னும் காயம் ஆறவில்லை என்று சொல்லி அவள் காதலை சொல்லாமல் சொல்வது அழகு.


மன்னன் ராஜகுருவை சிறையில் அடைக்கச் சொல்லும்போது, சிறந்த அறிவாளியாக சொல்லப்படும் பத்மாவதி, ராஜகுருவை நாடு கடத்தச் சொல்வது முரண்பாடாக தெரிகிறது. நாடு கடத்தப்பட்ட ஒருவன் நாட்டிற்கு எதிராக வேலை செய்வது மிகச்சுலபம் என்பது அவளுக்கு தெரியாதா என்ன.

ரதன் சிங் நேர்மையானவனாக நியாய தர்மத்திற்கு கட்டுப்பட்டவனாக இருப்பது சரி. அதற்காக எந்த விதிகளையும் பின்பற்றாத எதிரியான முரடன் அலாவுதீனிடம் கூட அப்படி இருப்பது, ரதன் சிங் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறானே என்று நாம் வருத்தப்படும்படி உள்ளது.


அலாவுதீன் கோட்டையை முற்றுகையிட்டு அதன்மீது நெருப்புப் பந்தங்களை இயந்திரம் மூலம் வீசும்போது, மேவாத் நாட்டு படைத்தலைவர்கள், இது என்ன புது விதமான ஆயுதம் கொண்டு தாக்குகிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். அரசனின் உளவுப்படை எதிரியிடம் இருக்கும் ஆயுதங்கள் பற்றி தகவல் தராமல் இருந்திருப்பார்களா என்ன.

இறுதியில் ரதன் சிங்கும் அலாவுதீனும் நேருக்கு நேர் சண்டையிடும்பொது, அலாவுதீனின் அடிமை மாலிக் கபூர் தன் எஜமானனை காக்க ரதன் சிங் மேல் அம்பு எய்கிறான். ஆனால், எதிரே நின்று பார்த்துக்கொண்டு இருக்கும் ரதன் சிங்கின் படைத் தலைவர்களோ ஒன்றும் செய்யாமல், குறைந்த பட்சம் ரதன் சிங்கிற்கு எச்சரிக்கை கூட செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. மாலிக் கபூர்க்கு இருக்கும் எஜமான விஸ்வாசம் ரதன் சிங்கின் ஆட்களுக்கு இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது.


அலாவுதீன் கில்ஜி பாத்திரத்தில்  ரண்வீர் சிங் கலக்கி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவர் உயரமும் உடற்கட்டும் அந்த கதாபாத்திரத்திற்கு கண கச்சிசிதமாக  பொருந்துகிறது. தீபிகா படுகோனேவும் ஷாஹித் கபூரும் தங்கள் பாத்திரங்களை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

படம் முழுக்கவே ரதன் சிங்கின் முகம் அரச கம்பீரம் இன்றி ஒருவித சோர்வுடனும் கவலையுடனும் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. மாலிக் கபுராக வரும் ஜிம் சரப் அந்த கதாபாத்திரத்தின் கொடிய குணம், காமம், பொறாமை, குரூரம், ஏளனம் என எல்லா உணர்வுகளையும் தன் பார்வையாலேயே காண்பித்து அசத்துகிறார். 


கதை பதினான்காம் நூற்றாண்டில் நடந்தது என்பதால் உட்புற காட்சிகள் அனைத்துமே விளக்குகளும் தீப்பந்தங்களும் தரும் ஒளியில் அமைத்திருப்பது அருமை.

3-டி-யில் சிலகாட்சிகளில் மனிதர்களின் உருவம், குறிப்பாக தீபிகாவின் உருவம், இயல்பாக இல்லாமல் அனிமேஷன் செய்தது போல இருக்கிறது. 

பத்மாவதியையோ ராஜபுத்திரர்களையோ சிறுமை படுத்துவதுபோல எந்த காட்சியும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பத்மாவதி மற்ற பெண்களுடன் சேர்ந்து கூமர் நடனம்  ஆடுவதுதான் பிரச்சினை என்றால், அந்த பாடல் வரும்போது, உண்மையில் அரசிகள் இப்படி நடனம் ஆடமாட்டார்கள், படத்திற்காகவே இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு அறிவிப்பு போட்டு பிரச்னையை முடித்திருக்கலாம். இதற்கான போராட்டங்கள் சற்று அதிகப்படியாகவே தோன்றுகிறது.


மொத்தத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ஒரு படம். தயாரிக்கப்பட்ட விதத்திற்காக ஒருமுறை பார்க்கலாம்.

படங்கள் தந்து உதவியது: கூகுள் 

2 comments:

 1. அழகாக விமர்சித்து இருக்கின்றீர்கள் நண்பரே

  ///பத்மாவத் என்பதற்கு பதிலாக அலாவுதீனின் தோல்வி என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தால் பொருத்தமாகவும் சர்ச்சைகளெல்லாம் இல்லாமலும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.///

  இக்கருத்தை ஆமோதிக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. வருக கில்லெர் ஜீ அவர்களே. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி. நீங்கள் என் கருத்தை ஆமோதித்தது மகிழ்ச்சி தருகிறது.

   Delete